கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே சந்தேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் கிராமப்புற பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தொ.அ.ரவி, கம்போடியா தமிழ்ச்சங்க தலைவர் ராமேஸ்வரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
சத்குருவால் துவங்கப்பட்ட ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு திருவிழா, கிராம மக்கள் மத்தியில் விளையாட்டின் மூலம் உற்சாகத்தை கொண்டு வருதல், சாதிய தடைகளை உடைத்து ஒற்றுமையை கொண்டு வருதல், கிராமப்புற பெண்களுக்கு வல்லமை அளித்தல் மற்றும் போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாகாமல் தடுத்தல் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. ஈஷா கிராமவத்சவம் நடப்பாண்டில், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஈஷா வித்யா பள்ளியில் தொண்டாமுத்தூர், பூலுவபட்டி, நல்லூர்வயல்பதி ஆகிய 3 கிளஸ்டர்களில் உள்ள த்ரோபால் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றன. இதில் மொத்தம் 43 அணிகள் மூலம் 600-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்கள் பங்கேற்றனர்.
இதில் நல்லூர்வயல்பதி கிளஸ்டர் அளவில் நடைபெற்ற போட்டியில் நல்லூர்வயல்பதி முதல் பரிசு வென்றது. பூலுவபட்டி கேம்ப் இரண்டாமிடம், சீங்கபதி மூன்றாமிடம், செம்மேடு காந்தி காலனி நான்காமிடம் பிடித்தன.
அதேபோன்று தொண்டாமுத்தூர் கிளஸ்டர் அளவில் நடைபெற்ற போட்டியில்
போட்டியில், ருத்ராபூர் முதல் பரிசு பெற்றது. பசுமை ஏ அணி இரண்டாமிடமும், பசுமை பி மூன்றாமிடமும் பிடித்தன. தீனம்பாளையம் அணி நான்காம் பரிசு பெற்றது.
பூலுவபட்டி கிளஸ்டர் அளவில் நடைபெற்ற போட்டியில் நாதேகவுண்டம்புதூர் ஏ அணி முதல் பரிசு பெற்றது. சென்னனூர் இரண்டாமிடமும், நாதேகவுண்டன் புதூர் பி மூன்றாமிடமும் பிடித்தன. கள்ளிப்பாளையம் ஏ அணி நான்காம் இடம் பிடித்தது.
இதில் தொண்டாமுத்தூர் முன்னாள் பேரூராட்சி தலைவரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான தொ.அ.ரவி, கம்போடியாவில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் தலைவர் எம்.ராமேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். வெற்றி பெற்ற அணிகள் அடுத்த கட்டமாக, நடைபெற உள்ள மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய 6 மாநிலங்கள், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மண்டல அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறும். இதனையடுத்து ஆறு மாநில அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 21ம் தேதி, கோவை ஈஷாவில் உள்ள புகழ்பெற்ற ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளது.