விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

Estimated read time 1 min read

மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு 21-ந்தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில், 2,500 ஆண் பவுன்சர்கள், 500 பெண் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். விஜய் “உங்கள் விஜய்.. நான் வரேன்.. ” என்ற பாடலுடன் தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வாக் மேற்கொண்டார். அப்போது விஜயை நெருங்கி வந்த தொண்டர்களை அருகில் இருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர்.

ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்கள் யாரும் ஏறிவிடக்கூடாது என விழா ஏற்பாட்டாளர்கள் முன்பே இரும்புக்கம்பிகளில் கிரீஸ் தடவி இருந்தனர். ஆனாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் ரேம்ப் வாக் சென்றபோது அவரது ரசிகர்கள், பவுன்சர்களையும் மீறி மேடையில் ஏறி குதித்து விஜய் அருகே நெருங்கி வந்தனர்.

அவர்களை தடுத்த பவுன்சர்கள், குண்டுக்கட்டாக மேடையில் இருந்து தூக்கி எறிந்தனர். அப்போது ஒரு ரசிகர் கீழிருந்து ரேம்ப் வாக் மேடையில் ஏறியபோது பவுன்சர் ஒருவர் அவரை தூக்கி தரையில் எறிந்தார். இதில் துடிதுடித்துப்போன அந்த ரசிகர் காலில் முறிவு ஏற்பட்டு அந்த இடத்தில் இருந்து எழுந்து செல்ல முடியாமல் வேதனையில் அழுது கதறியபடி தரையில் புரண்டு தவித்தார். அப்போது அவரை யாரும் கண்டுகொள்ளவோ, உதவி செய்யவோ முன்வரவில்லை. விஜய் பேச்சை மட்டுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதேபோல் மற்றொரு இளைஞரை பவுன்சர்கள் தூக்கி எறிந்தபோது அவர், கம்பியைப்பிடித்து தொற்றிக் கொண்டார். அவர் கீழே விழுந்திருந்தால் அவரது கைகால்கள் உடைந்திருக்கும் அல்லது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். இதனை வீடியோவாக பார்த்த அந்த இளைஞர்களின் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகள் மீது பவுன்சர்கள் நடத்திய தாக்குதலை பார்த்து நடு நடுங்கி போயினர்.

இந்தநிலையில், மதுரை த.வெ.க. மாநாட்டில் விஜயின் பாதுகாவலர்கள் தன்னை குண்டுக்கட்டாக தூக்கி வீசினர் என பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தில் வசிக்கும் சரத்குமார் என்ற இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். விஜய் நடந்து வந்த ரேம்ப் மீது ஏற முயன்ற சரத்குமாரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். விஜயின் பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது, அவருடைய தாயாரும் உடன் சென்று புகார் கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author