சென்னைவாசிகள் கவனத்திற்கு..! புதிய யூ-டர்ன் சாலைகள் வர போகுது..!

Estimated read time 1 min read

சென்னை உள்வட்டச் சாலையில் பாடி மற்றும் கொரட்டூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை ஆலோசனை நடத்தியது. இதையடுத்து ஜவஹர்லால் நேரு சாலையில் கொரட்டூர் மற்றும் வில்லிவாக்கம் ரயில் நிலையங்கள் அருகில் யூ-டர்ன் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது கவனிக்கத்தக்கது. ஏற்கனவே இப்பகுதிகளில் உள்ள மேம்பாலத்திற்கு கீழாக யூ-டர்ன் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பாடி, வில்லிவாக்கம், கொளத்தூர், தாதன் குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறுவர். இவர்கள் உள்வட்டச் சாலையின் வலதுபுறம் பயணித்து கொரட்டூர், ரெட் ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும்.

குறிப்பாக நெருக்கடியான கொரட்டூர் வடக்கு ஜங்ஷனிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும் கொரட்டூர் வடக்கு பகுதியில் உள்ள வீல்ஸ் இந்தியா, லூகாஸ் டிவிஎஸ், சுந்தரம் கிளேடன் ஆகிய தொழில் நிறுவனங்களுக்கு செல்வோரும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாக பயணிக்க முடியும். இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்று பார்க்கலாம். பாடி பகுதியில் இடதுபுறமாக 374 மீட்டர் சர்வீஸ் ரோடு அமைக்கப்படுகிறது.

வலதுபுறமாக 424 மீட்டர் சர்வீஸ் ரோடு அமைகிறது. இதில் 75 மீட்டர் பகுதியானது ரயில் பாதைக்கு கீழே செல்வது கவனிக்கத்தக்கது. ரெட் ஹில்ஸ் பகுதியில் இடதுபுறமாக 364 மீட்டர் தூரமும், வலதுபுறமாக 354 மீட்டர் தூரமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்படுகிறது. மேலும் 75 மீட்டர் தூர சுரங்க வழித்தடமாக இருக்கும். இதன் உயரம் 5.5 மீட்டருக்கு மேல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடி, கொரட்டூர் பகுதியில் உள்வட்டச் சாலையில் புதிய யூ-டர்ன் சர்வீஸ் ரோடு அமைப்பதற்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி 14.5 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Please follow and like us:

You May Also Like

More From Author