வெனிசுலா நாட்டின் அங்கோஸ்டுராவில் உள்ள தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில், 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் மண்ணுக்குள் புதைந்திருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
வெனிசுலா நாட்டின் அங்கோஸ்டுராவில் அதிகளவில் தங்கம் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த நாட்டில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன. அவர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என்று கூறப்படுகிறது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி வேலை செய்வதால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. உரிய பாதுகாப்பின்றி சுரங்கம் தோண்டுபவர்கள் மீது அந்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், வெனிசுலாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில், 14 பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கோஸ்டுராவில் உள்ள புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோதமாக தங்க சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது, தங்கச் சுரங்கத்தின் ஒரு பாதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் சுரங்கத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதுகுறித்து மீட்புக் குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் இயந்திரங்களைக் கொண்டு மண்ணை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில், 14 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் பலர் மண்ணுக்குள் மேலும் பலர் புதைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.