நவராத்தியை கொண்டாடினால் நோய்கள் வரும் முன் விரட்டலாம். மேலும் நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது. இந்த நாட்களில் அம்பிகையை பூஜித்தால் அம்மை நோய் மற்றும் கிரக தோஷங்கள் நீங்கும். மேலும் எதிர்மறையான விளைவுகள் எதுவும் அண்டாது.
ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி மற்றும் மனிதர் என எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் அவளை காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதை மையப்படுத்தியே நவராத்திரியின் போது மட்டும் கொலு அமைக்கப்படுகிறது. நவராத்திரி கொலுவில் பொம்மைகள் அடுக்குவதற்கு என்று ஒரு முறை உள்ளது.
கொலு பொம்மை அடுக்கும் முறை :
முதல் படியில் – ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்.
இரண்டாம் படியில் – இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.
மூன்றாம் படியில் – மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள்.
நான்காம் படியில் – நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.
ஐந்தாம் படியில் – ஐந்தறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்.
ஆறாம் படியில் – ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள்.
ஏழாம் படியில் – சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.
எட்டாம் படியில் – தேவர்களின் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள்.
ஒன்பதாம் படியில் – பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்..