கரூர் பள்ளப்பட்டி பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான், தனது சொந்த ஊர் கரூர் என்பதால் மனவேதனையுடன் செய்தியாளர்களிடம் பேசினார். “இரண்டு நாட்களாக தூங்கவில்லை. எப்படி தூங்க முடியும்? அந்த நெரிசலில் சிக்கி மரணித்தவர்கள் எப்படியெல்லாம் வேதனையை அனுபவித்து இருப்பார்கள் என்பதை நினைக்கும்போது மனம் நொறுங்குகிறது.
நம்ம நாட்டிலேயே இப்படியான துயரம் நிகழ்வது அவமானமாக இருக்கிறது” என்று அவர் கண்கலங்கியபடி தெரிவித்தார்.
அரசியல் குறித்த விமர்சனங்கள்
அரசியலாக்கம் குறித்த கேள்விக்கு மன்சூர் அலிகான், “விஜயின் வளர்ச்சி சிலருக்கு பிடிக்கவில்லை. அதை எதிர்க்க விரும்பினால் கொள்கை ரீதியாக எதிர்க்கலாம். கூட்டம் நடத்தி விவாதிக்கலாம். ஆனால் சொந்த மண்ணில், சொந்த மக்களை காவு கொடுப்பது அயோக்கிய அரசியல். யார் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள்.
இன்னும் ஆறு மாதங்களில் அதற்கான பதில் வெளிவரும். அரசியலில் சிலர் கோமாளித்தனமாக நடக்கிறார்கள், சிலர் வேண்டாமென்று ஒதுங்குகிறார்கள், சிலர் திமிங்கலமாக நடந்து கொள்கிறார்கள்” எனக் கடுமையாக சாடினார். மேலும், “விஜய் எனக்கு தம்பி. நான் அவருக்கு முழு ஆதரவு தருகிறேன்” என அவர் வலியுறுத்தினார்.
போலீஸ் பாதுகாப்பு மற்றும் விசாரணை
அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெறும் விசாரணை குறித்து, “அந்த விசாரணையால் எதுவும் நடக்காது” என மன்சூர் அலிகான் சந்தேகம் வெளியிட்டார். போலீஸ் பாதுகாப்பு குறித்த குற்றச்சாட்டில், “முறையாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.
எந்தக் கட்சிக்கும் இவ்வளவு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதில்லை. இது திட்டமிட்ட சதி. 41 பேரின் மரணம் நடந்துவிட்ட நிலையில், விஜயை அங்கு பேசவிடாமல் அனுப்பிவிட்டார்கள். பிறகு அவர் எப்படி கருத்து தெரிவிப்பார்? தவறு செய்தவர்கள் ஆறு மாதத்தில் தண்டனை அனுபவிப்பார்கள். விஜய் மாமனிதர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கே தெரியும்” எனக் குறிப்பிட்டார்.