காந்தி சிலைக்கு காவி ஆடை: வைகோ கண்டனம்..!

Estimated read time 1 min read

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென் இந்தியா முழுமைக்குமாக 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம், மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது என்ற பெருமை கொண்டது.

1921-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த காந்தியடிகள், மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தார். அப்போது மதுரையில் ஏழை, எளிய மக்களும், விவசாயிகளும் மேலாடை அணியக் கூட வசதி இல்லாமல் வறுமையில் இருந்ததைக் கண்டு மனம் வருந்தினார்.

அப்போதுதான் “தன் நாட்டு மக்களின் அன்றைய நிலையைக் கண்டு நாடு முழுமைக்கும் என்றைக்குத் தம் மக்கள் மேலாடை அணியும் நிலை வருமோ அன்று வரை தானும் மேலாடை அணிவதில்லை” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உறுதிமொழியை செப்டம்பர் 22-ல் எடுத்தார். இந்த நிகழ்வு அண்ணல் காந்தியடிகளின் ஆடைப்புரட்சி என்று குறிப்பிடப்படுகின்றது. அதன்பிறகு வாழ்நாள் முழுவதும் எளிய கதர் ஆடைகளைத்தான் காந்தி அணிந்தார்.

மேலும் காந்தியை கோட்சே சுட்டபோது காந்தியடிகள் தன் உடலில் அணிந்திருந்த ஆடையானது மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்குத்தான் கொண்டு வரப்பட்டது. ரத்தக் கறை படிந்த காந்தியடிகளின் இறுதி உடை ஏன் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டது? என்பதற்கான காரணமும், மதுரைக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு, அவரது பிறந்த நாளான இன்று பாஜகவினர் காவி ஆடை அணிவித்து உள்ளனர்.

காந்தியாரை சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக கோட்சே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர் என்பதும், மதவாதக் கூட்டம் காந்தியின் கொலைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்ததும் வரலாற்றில் ரத்த அத்தியாயங்களாக எழுதப்பட்டிருக்கின்றன.

காந்தியார் எந்த மத நல்லிணக்கத்திற்காக உயிரையே தியாகம் செய்தாரோ அந்த மகாத்மா காந்தியின் சிலையை தொடுவதற்கே அருகதை அற்றக் கூட்டம் மதுரையில் அவரது சிலைக்கு காவி ஆடை அணிவித்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author