இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), தனது வங்கியிலுள்ள சேமிப்பு கணக்குகளுக்கு (SB-Public) குறைந்தபட்ச சராசரி இருப்பை (MAB) பராமரிக்காததற்காக விதிக்கப்படும் அபராத கட்டணங்களை தள்ளுபடி செய்வதை அறிவித்திருக்கிறது. 2025 அக்டோபர் 01-ம் தேதியிலிருந்து செயல்பாட்டிற்கு வரும் என்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), திரு. எம். சிடி. எம். சிதம்பரம் செட்டியார் அவர்களால் பிப்ரவரி 10, 1937 அன்று நிறுவப்பட்டது. 1969-ல், IOB தேசியமயமாக்கப்பட்டு, இந்திய அரசின் கீழ் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக ஆனது. இந்த வங்கி, தமிழ்நாடு மாநிலத்தில் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் (SLBC) ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளது மற்றும் 15 மாவட்டங்களில் முன்னணி வங்கிப் பொறுப்பையும் கொண்டுள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் 3,345 கிளைகளையும் சுமார் 3,461 ஏடிஎம்களையும் ஐஓபி நிர்வகித்து வருகிறது. ஜூன் 30, 2025 அன்று முடிவடைந்த காலாண்டில், வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.5,93,213 கோடியாகவும், செயல்பாட்டு லாபம் ரூ.2,358 கோடியாகவும், நிகர லாபம் ரூ.1,111 கோடியாகவும் இருந்தது.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), தனது வங்கியிலுள்ள சேமிப்பு கணக்குகளுக்கு (SB-Public) குறைந்தபட்ச சராசரி இருப்பை (MAB) பராமரிக்காததற்காக விதிக்கப்படும் அபராத கட்டணங்களை தள்ளுபடி செய்வதை அறிவித்திருக்கிறது.
இந்த முடிவானது, வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது. சாமானிய, வசதியற்ற மக்களுக்கு வங்கிச் செயல்பாடுகளிலான அனுபவத்தை இந்த முடிவு மேலும் எளிதாக்கும். குறிப்பாக PMJDY, BSBDA, சிறிய கணக்குகள், ஐஓபி சேமிப்பு கணக்கு ஊதிய தொகுப்பு, ஐஓபி சிக்ஸ்டி பிளஸ், ஐஓபி சேமிப்பு கணக்கு ஓய்வுதாரர் திட்டம் மற்றும் ஐஓபி அரசு கணக்கு ஆகியவற்றில் குறைந்தபட்ச இருப்புநிலையை பராமரிக்காததற்கான கட்டணங்களை இவ்வங்கி ஏற்கனவே தள்ளுபடி செய்திருக்கிறது.
அதேசமயம் SB-MAX, SB-HNI, SB பிரைம், SB பிரியாரிட்டி, SB பிரிவிலேஜ், NRI எலவேட், NRI பிரிவிலேஜ் மற்றும் NRI சிக்னேச்சர் ஆகியவை உட்பட பிரீமியம் சேமிப்பு கணக்கு திட்டங்களை பொறுத்தவரை குறைந்தபட்ச இருப்புநிலை பராமரிக்கப்படாத நேர்வுகளில் விதிக்கப்படும் அபராத கட்டணங்கள் மாற்றமின்றி தொடர்ந்து இருக்கும்.
மினிமம் பேலன்ஸ் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் & தலைமை செயலாக்க அதிகாரி திரு. அஜய் குமார் ஶ்ரீவஸ்தவா, “எமது வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்குகின்ற இந்த தள்ளுபடி திட்டத்தை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர் நலன் மற்றும் நிதி உள்ளடக்கம் மீது எமது அர்ப்பணிப்பை இந்த முடிவு பிரதிபலிக்கிறது.
வங்கி சேவைகளை பெறுவதையும், பயன்படுத்துவதையும் அதிக வசதியானதாகவும் மற்றும் சிரமமற்ற இனிய அனுபவமாகவும் எமது வாடிக்கையாளர்களுக்கு ஆக்குவதே எமது இலக்கு” என்றார்.