சென்னை : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது முதல் திரைப்படத்தை பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தெரிகிறது. இந்தத் தகவல், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவி, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்பநிதி தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், சமீபத்தில் வெளியான தனுஷ் நடிப்பில் “இட்லி கடை” படத்தின் விநியோகஸ்தராக அறிமுகமான அவர், இப்போது நடிப்புப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரது நடிப்புப் பயிற்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன, இது அவரது அறிமுகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள்” மற்றும் “மாமன்னன்” போன்ற சமூக கருத்துடன் கூடிய படங்களுக்கு பெயர் தாங்கிய இயக்குநர். உதயநிதி ஸ்டாலினின் கடைசி நடிப்புப் படமான “மாமன்னன்”ஐயும் அவர் இயக்கியிருந்தார். அந்த படமும் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆகி இருந்தது.
எனவே, இந்த இணைப்பு, இன்பநிதியின் அறிமுகப் படத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. படத்தின் கதை விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை, ஆனால் சமூக நீதி தொடர்பான அம்சங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள், இன்பநிதியின் நடிப்பு மற்றும் மாரி செல்வராஜின் இயக்கத்தில் படம் வந்தால் எப்படி இருக்கும் என இப்போதே எதிர்பார்க்க தொடங்கிவிட்டார்கள்.