
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய எல்லைக்குள் விழுந்த சீனாவின் PL-15E ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. அதிலுள்ள சிறப்பு அம்சங்களை அஸ்திரா-2 திட்டத்தில் இணைத்து மேம்படுத்த முடிவு செய்துள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, சீனாவின் அதிநவீன ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் PL-15E ரக ஏவுகணையை இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பயன்படுத்தியது. இந்திய எல்லையில் பல இடங்களில் இந்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதில் JF-17 போர் விமானம்மூலம் ஏவப்பட்ட PL-15E ரக ஏவுகணை ஒன்று, பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் பகுதியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டது.
இந்த ஏவுகணையில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளக்கூடிய என்ஜினியரிங் இல்லாதது, சீனாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் எதிரி நாடுகளுக்கு முழுமையாகக் கிடைக்கும் ஒரு ஏவுகணையின் மூலம் அதன் ஒட்டுமொத்த தொழில்நுட்பத்தைக் கண்டறிய முடியும் என்பதோடு, அதை ரிவர்ஸ் என்ஜினியரிங் செய்யவும் முடியும்.
சீனாவின் PL-15E ரக ஏவுகணையைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அதனை அங்குலம், அங்குலமாகச் சோதித்தது.. PL-15E ரக ஏவுகணை வானில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் ஆயுத அமைப்பை மேலும் ஆபத்தானதாக மாற்ற, சீன ஏவுகணையின் பல்வேறு மேம்பட்ட அம்சங்களை, அஸ்திரா-2 ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தில் இணைக்க DRDO திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. PL-15E என்பது 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய நீண்ட தூர, காட்சிக்கு அப்பாற்பட்ட வான்வழி ஏவுகணை. ஒலியை விட 5 மடங்கு வேக பாய்ச்சலில் செல்லக் கூடியது.
இதன் ரேடார் அமைப்பு ஜாமிங் சூழல்களிலும் கூட இலக்குகளைத் துல்லியமாக தாக்க உதவுகிறது. இந்த அனைத்து அம்சங்களும், குறிப்பாக ரேடார் தொழில்நுட்பம், இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான அஸ்திரா ஏவுகணையை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இதுதொடர்பான பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், சீன ஏவுகணையில் பல சிறந்த அம்சங்கள் இந்திய ஏவுகணைகள் மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
