சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவுக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலொங்கர்னை நவம்பர் 14ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மாநகரில் சந்தித்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-தாய்லாந்து தூதாண்மை உறவு நிறுவப்பட்ட காலம் முதல் தற்போது வரை, சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் முதலாவது தாய்லாந்து மன்னராக மகா வஜ்ரலொங்கர்ன் விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இரு தரப்புறவு மற்றும் சீன-தாய்லாந்து ஆழ்ந்த நட்புறவில் மன்னர் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட ஷிச்சின்பிங், இவ்வாண்டு, இரு தரப்புறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும் என்பதையும் தெரிவித்தார்.
கடந்த 50 ஆண்டுகளில், சர்வதேச நிலைமை மாறினாலும், இரு தரப்பும் கையோடு கை கோர்த்து, ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து வருகிறது. இரு நாடுகளும் நெருங்கிய உறவினர்களாகவும் நட்புறவுடன் கூட்டாளிகளாகவும் விளங்குகின்றன. புதிய வரலாற்றுத் தொடக்கத்தில், மன்னருடன் சேர்ந்து, அடுத்த 50 ஆண்டுகளில், இரு தரப்பு பொது எதிர்காலச் சமூக கட்டுமானத்திற்கான முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி, இரு தரப்புறவுக்கான புதிய அத்தியாயம் ஒன்றைத் தீட்ட விரும்புவதாகவும் அவர் கூறினார்.
சீனாவில் பயணம் மேற்கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட தாய்லாந்து மன்னர், இரு நாடுகளும் நாட்டு மக்களும் நெருக்கமான தொடர்பை மேற்கொண்டு, கூட்டு ஒத்துழைப்புகளை ஆழமாக்கியுள்ளனர் என்றார். மேலும், சீனாவின் வளர்ச்சிக்கான அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, பல்வேறு துறைகளில் சீனாவுக்கான திறப்பு மற்றும் ஒத்துழைப்பை விரிவாக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
