கோவையில் வரும் 26ம் தேதி செம்மொழிப் பூங்கா திறப்பு..!

Estimated read time 1 min read

கோயம்புத்தூர் விழா கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழா வரும் 24ஆம் தேதி வரை நீடிக்கிறது. விழா குழுவினர் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். விழாவின் தொடக்க நிகழ்வாக, கொடிசியா மைதானத்தில் ‘SKY DANCE’ என்ற பெயரில் கண்கவர் ஒளி, ஒலி மற்றும் லேசர் ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த விழாவை ஒருங்கிணைப்பாளர்கள் மிகச் சிறப்பாக நடத்துவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் சிறப்புடன் இந்த விழா நடத்தப்படுவதாகவும் பாராட்டினார். மேலும், இந்த விழா 50 ஆண்டுகளைக் கடந்தும் நம் மண்ணின் பெருமையை எடுத்துரைக்கும் என்றும் அவர் கூறினார். அனைத்துத் துறைகளிலும் ஒரு மாவட்டம் சிறந்து விளங்குகிறது என்றால் அது கோவை மாவட்டம் தான் என்றும், அத்தகைய சான்றோர்கள் உருவாக்கிய மண் கோவை மண் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

வரும் 26ஆம் தேதி கோவை மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், முதல்வர் செம்மொழிப் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். இது கோவைக்கு பெருமை சேர்க்கும் நாளாக அமையும் என்று அவர் தெரிவித்தார். முதல்வரின் எண்ணப்படி, அனைத்து மாவட்டங்களும் முன்னேற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். குறிப்பாக கோவை மாவட்டத்திற்கு அவர் தனி கவனம் செலுத்தி வருகிறார். கோவை அல்லது திருப்பூர் மாவட்டங்களுக்கு வரும்போதெல்லாம், மாவட்ட ஆட்சியரிடம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் கேட்டறிவார் என்றும் அவர் கூறினார்.

தன்னைப் பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “நானும் என்னுடைய ஊருக்கு சென்றால் YI- Young Indian சட்டையை தான் அணிவேன்” என்றும், இனி ஒவ்வொரு ஆண்டும் தனது பங்கும் இந்த கோவை விழாவில் இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்த கோவை விழா நம்முடைய விழா, குடும்ப விழா என்றும் அவர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author