தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை கடற்பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.
சேரன்மாதேவி, களக்காடு, அம்பை, நாங்குநேரி உட்படச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மேற்குத் தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்து வருவதால், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. அணைகள் நிரம்பும் தருவாயில் இருப்பதால் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் உள்ள காட்டாறுகள் மற்றும் ஊர்ப்பகுதிகளில் பெய்து வரும் மழைநீர் தாமிரபரணி ஆற்றில் கலந்து வினாடிக்கு 19 ஆயிரம் கன அடிக்கு மேல் செல்வதால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலைச் சூழ்ந்தவாறு வெள்ளம் செல்வதுடன், அங்குள்ள நடைபாலத்தையும் மூழ்கடித்தது.
காரையாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மீட்பு மையம் மூலமாகக் பொதுமக்களின் செல்போன்களுக்கு இதுகுறித்த எச்சரிக்கை மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
