தென் சூடானுக்கான சீனத் தூதரகம் அந்நாட்டின் தலைநகர் ஜூபாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியத் தொகுப்பை நன்கொடையாக வழங்கியது. இந்நடவடிக்கையின் மூலம் சீனா அந்நாட்டில் பெண்களுக்கு ஆதரவளிக்கும் தன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம் மற்றும் தென் சூடானின் பாலினம், குழந்தை மற்றும் சமூக நல அமைச்சகத்துடன் இணைந்து வழங்கப்பட்ட இந்த நன்கொடையானது உதவி தேவைப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை நிலைமையையும் கண்ணியத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தென் சூடானுக்கான சீனத் தூதர் மா ச்சியாங், இந்த அத்தியாவசியத் தொகுப்பில் சானிட்டரி நாப்கின்கள், சோப்புகள் மற்றும் சூரியசக்தியில் இயங்கும் ஒளிவிளக்குகள் உள்ளதாகவும், இத்தொகுப்பானது ஐ.நாவின் மக்கள் தொகை நிதியத்தின் மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், பெண்கள் மனித நாகரிகத்திற்கான முக்கியப் பங்களிப்பாளர்கள் எனக் குறிப்பிட்ட அவர் பெண்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவது சர்வதேச சமூகத்தின் ஒரு கூட்டுப் பொறுப்பாகும் என்றும் கூறினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட தென் சூடானின் பாலினம், குழந்தை மற்றும் சமூக நல அமைச்சர் ரோடா ருடால்ஃப் இந்த உதவிக்காக சீனாவுக்கும் ஐ.நாவின் மக்கள் தொகை நிதியத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
