தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கடந்த மக்களவைத் தேர்தலின் போது ராமநாதபுரம் தொகுதியில் தன்னைத் தோற்கடிக்க திட்டமிட்ட சதி நடந்ததாகக் குற்றம் சாட்டினார்.
அந்தத் தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட தனக்கு எதிராக, குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஓ. பன்னீர்செல்வம் என்ற அதே பெயர் கொண்ட ஆறு நபர்களைக் களமிறக்கியதாக அவர் வேதனை தெரிவித்தார். இதுபோன்ற முட்டுக்கட்டைகளைத் தாண்டியும் மக்கள் தனக்கு ஆதரவு அளித்ததாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் களத்தில் தன்னை வீழ்த்த எடுக்கப்பட்ட இத்தகைய முயற்சிகள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் சாடினார்.
தொடர்ந்து தனது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், புதிய கட்சி தொடங்குவது அல்லது வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகத் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார். இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், உரிய நேரத்தில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
அதிமுகவின் தற்போதைய சூழல் மற்றும் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்துத் தொடர்ந்து மௌனம் காத்து வரும் ஓ. பன்னீர்செல்வம், தனது அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
