தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் பகுதியில் இரவு நேரங்களில் ஒரு மர்ம நபர் பெண் வேடமிட்டு (வெள்ளை நிறச் சேலை அணிந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர்) வீடுகளின் கதவுகளைத் தட்டி உதவி கேட்பதுபோல் நடிப்பதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழிலைச் செய்கின்றனர்.
கரூர் பகுதியில் இதேபோல இரவு நேரத்தில் பெண் ஒருவர் உதவி கேட்பதுபோல் கதவுகளைத் தட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தற்போது குரும்பூரிலும் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனியாக இருக்கும் முதியவர்கள், பெண்கள் அல்லது ஆண்கள் துணை இல்லாத வீடுகளைக் குறிவைத்து இந்த மர்ம நபர் செயல்படுவதாகத் தெரிகிறது.
இந்த மர்ம நபரின் நடமாட்டம் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. குரும்பூர் புறையூர் பகுதியில் இந்த நபரை பொதுமக்கள் சிலர் துரத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வுத் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசார் உடனடியாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
