மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல் போக்கு, தற்போது முழு அளவிலான போராக உருவெடுத்துள்ளது. அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று ஈரான் மீது அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்த நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா நீண்டகாலமாக முயற்சி மேற்கொண்டு வந்தது. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தன. இதனைத் தொடர்ந்து, ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் முக்கியப் பகுதிகளை இலக்கு வைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து குண்டுமழை பொழிந்தன.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மட்டுமின்றி மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகளையும் ஈரான் இலக்கு வைத்துள்ளது. அதன்படி குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளிலும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “மத்திய கிழக்கில் நிலவும் மோதல் போக்கு கவலையளிக்கிறது. அனைத்துத் தரப்பினரும் வன்முறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும். ஒரு நாட்டின் இறையாண்மையை மற்றொரு நாடு மதிக்க வேண்டும். அமைதி வழியில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும் போரினால் உலகளாவிய பொருளாதார பாதிப்புகள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமும் எழுந்துள்ளது.
