மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவுற்று கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23) அன்றே முடிவுகள் வெளியாகிவிட்டது. மேலும், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக மட்டுமே தனித்து 132 தொகுதிகளை கைப்பற்றியது.
பெரும்பான்மைக்கு இன்னும் 13 உறுப்பினர்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஒரு வார காலம் ஆகியும் இன்னும் அங்கு முதலமைச்சர் யார் எப்போது புதிய அரசாங்கம் பதவி ஏற்கும் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன. இது குறித்த பல்வேறு தகவல்களும் உலா வந்த வண்ணம் இருக்கிறது.
சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ஷிர்ஷத் கூறுகையில், “நாளை மாலை எங்கள் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மிக பெரிய முடிவு எடுக்க உள்ளார். அது மகாராஷ்டிரா அரசியலில் மிக முக்கிய முடிவாக இருக்கும். டிசம்பர் 5ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்கும். ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த ஊருக்கு போவது இது புதியதல்ல அடிக்கடி அவரது சொந்த ஊருக்கு செல்வார். ” என்று கூறினார்.
PTI செய்தி நிறுவனத்திடம் மூத்த பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், “டிசம்பர் 5ஆம் தேதி மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்கும். முதலமைச்சர் ரேஸில் பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல் வரிசையில் உள்ளார். விரைவில் பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.” என தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா உடன் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அடுத்தகட்ட ஆலோசனையில் புதிய முதலமைச்சர் யார் என்று உறுதிப்படுத்தப்படும் என மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.