இன்று ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தாலும், வரலாற்றில் ஒரு காலத்தில் இவை இரண்டும் ரகசிய கூட்டாளிகளாக இருந்தன என்பது பலரும் அறியாத உண்மை. 1967-ல் நடந்த ‘ஆறு நாள் போருக்கு’ பிறகு, எகிப்து சூயஸ் கால்வாயை மூடியதால் உலகளவில் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
அப்போது இஸ்ரேலுக்கு எரிசக்தி தேவையும், ஈரானுக்கு ஐரோப்பாவிற்கு எண்ணெய் அனுப்ப ஒரு மாற்று வழியும் தேவைப்பட்டது. இதற்காக 1968-ல் இரு நாடுகளும் இணைந்து 254 கிலோமீட்டர் நீளமுள்ள ‘எய்லாட்-அஷ்கெலோன்’ என்ற ரகசிய எண்ணெய் குழாய் திட்டத்தை உருவாக்கின.
செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைத்த இந்தத் திட்டம், ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்வதை விட வேகமானதாகவும் லாபகரமானதாகவும் இருந்தது. இந்த வர்த்தகம் அரபு நாடுகளுக்குத் தெரியாமல் இருக்க மிகவும் ரகசியமாக கையாளப்பட்டது.
ஈரானிய எண்ணெய் கப்பல்கள் ஜிப்ரால்டருக்குச் செல்வதாகப் பொய் சொல்லிவிட்டு, நடுக்கடலில் பாதையை மாற்றி இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் சென்றன. இஸ்ரேலும் இந்த வர்த்தகம் குறித்த தகவல்கள் வெளியே கசியாமல் இருக்க கடுமையான தணிக்கையை மேற்கொண்டது.
பல வெளிநாட்டு பினாமி நிறுவனங்கள் மூலம் இந்த ரகசியக் கூட்டணி பல ஆண்டுகள் நீடித்தது. இருப்பினும், 1979-ல் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அரசு இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்ததால், இந்த நீண்ட கால ரகசிய எண்ணெய் கூட்டணி முறைப்படி முடிவுக்கு வந்தது.
