பனிச்சூடு

Estimated read time 0 min read

Web team

IMG_20240324_093450_008.jpg

பனிச் சூடு !

நூல் ஆசிரியர் : கவிஞர் அ.மணிவண்ணன்.

நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

நூலின் அட்டைப் படத்தில் மூன்று மத கோபுரங்களும், புறாக்களும் அலங்கரிக்கின்றன. நூல் ஆசிரியர் கவிஞர் ஆ.மணிவண்ணன் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் காக்கிச்சட்டை அணிந்த இலக்கிய இதயம். மென்மையான மனிதரின் மேன்மையான நூல்.

நூல் காணிக்கையிலேயே வித்தியாசப்படுகிறார் கவிஞர்.
தன்மதம் வளர்க்கக் கடல் தாண்டி வந்திடினும்
கன்னித்தமிழ் மீது காதல் கொண்டு
மாற்று மதமென்று புறந்தள்ளாமல்
அருமையாய்த் திருவாசகத்தை மொழி பெயர்த்த
உண்மையான மறைதிரு ஜி.யூ. போப் திருமகனார்க்கு
இந்நூலை காணிக்கையாக்குவதில் பெருமை கொள்கிறேன்.

காவல்துறை உயர் அதிகாரி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் அணிந்துறை அற்புதம். தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்களின் அணிந்துறை தோரண வாயிலாக உள்ளது.

சந்தேகம்
இறைவன் யாரென்று? சந்தேகம் இருக்குமிடம்? சந்தேகம் கருப்பா? சிவப்பா? சந்தேகம் ஒருவரா? பலரா? சந்தேகம் அதோ அங்கே அருகிலுள்ள இரண்டு தெருக்கள் எரிகின்றன சந்தேகமில்லை அங்கே எங்கள் இறைவன் தான் உயர்ந்தவரென்று இருதரப்பினரிடையே மோதல்

கடவுளை வணங்குபவர்கள் மோதிக் கொள்ளும் அவலத்தை தோலுரிக்கும் கவிதை இது. மிகவும் ரசித்துப் படித்தேன். கடவுள் பக்தி மிக்க கவிஞர், அவரே நாட்டு நடப்பை நன்கு பதிவு செய்துள்ளார். கவிஞர் ஆத்திகர் என்பதால், மண்டைக்காடு பகவதி அன்னை, முருகன் வாழும் குன்றம் என பக்தி கவிதைகள் நூலில் இருந்தாலும் கவிதைகளில் மனிதநேயம் விதைப்பது பாரட்டுக்குரியது.

பரபரப்பான காவல்துறையில் பணிபுரிந்து கொண்டு இவருக்கு கவிதை எழுதிட நேரமும் மனமும் எப்படி? வாய்க்கின்றது என்று வியந்து போனேன்.

அவரவர் கற்பனையை ஆண்டவராய் ஆக்கியதால் எண்ணிக்கையில் அதிகமாகிச் சிலர் ஏளனம் செய்ய ஏதுவாகிவிட்டது.

எள்ளல் சுவையுடன் கடவுள் எண்ணிக்கை மிகுதியை பதிவு செய்துள்ளார்.

சிறுவயதில் நடந்த நிகழ்வுகளை மறக்காமல் நினைவில் வைத்து இருந்து பெற்றெடுத்த பெற்றோரின் சிறப்பை கவிதைகளால் போற்றுகின்றார்.

இன்றென் பேச்சைக் கேட்டு சிலர் கை தட்டுவதும், பாராட்டுவதும்
அன்று அந்த எளியோர் தந்த உலகப் பாடங்களே

பெற்றோர்கள் தான் முதல் ஆசிரியர்கள் என்பதை நன்கு பதிவு செய்துள்ளார்.

இலவசங்களைத் தந்து மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளைச் சாடுகின்றார் கவிதையில். எனது ஆட்சியில்

ஒவ்வொரு குடிமகனும் தன் சொந்தக் காலில் நிற்கச் செய்வேன்
இலவசமாய் வாங்கும் வழக்கத்தை இந்தியர் இனி
அவமானமாகக் கருத வழிவகுப்பேன்

இந்த கவிதையைப் படித்ததும் எனக்கு, “இலவசமாக மீன் வழங்குவதை மீன் பிடிக்கக் கற்றுத் தர வேண்டும்” என்ற பொன்மொழி நினைவிற்கு வந்தது. மக்கள் உழைப்பதற்கு வருமானம் ஈட்டுவதற்கு தொழில் வளத்தை உருவாக்கி விட்டால், இலவசங்கள் வழங்க வேண்டிய அவசியமும் இருக்காது. அரசியல்வாதிகள் அனைவரும் உணர வேண்டும்.

கவிஞர் ஆத்திகர் என்ற போதும், கடவுளின் மீது கோபம் கொண்டு பாடும் கவிதையிலும் மனிதநேயம் விதைக்கின்றார்.

ஒழிய
பிஞ்சுக் குழந்தைக்கு நோய் தரும் இறைவன் ஒழிக!
பேசத் தெரிந்தும் பாராளுமன்றத்தில்
உட்கார்ந்து உறங்கும் உறுப்பினர்கள் ஒழிக
வகுப்பு நேரத்தில் வட்டிக்கணக்கு பார்க்கும்
வாத்தியார் ஒழிக

பொறுப்பானவர்களின் பொறுப்பற்ற செயலைச் சாடுகிறார். பட்டுக்கோட்டையின் பாடல் வரி நினைவுக்கு வந்தது. “பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா”.

அடிமட்டத் தொண்டர்கள்
கண்ணிருந்தும் குருடர்கள்
காதில் விழுவதை வேதமென்று நினைக்கும் வெகுளிகள்
தேர்தலின் போது லஞ்சம் வாங்கி
அய்ந்தாண்டுகள் தலைவர்களை
அனுமதிக்கும் ஜனநாயக எஜமானர்கள்

பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும், கேலிக் கூத்தாக்கி விட்ட இன்றைய தேர்தல் முறையைச் சாடுகின்றார்.

மாமனிதர் அப்துல் கலாம் பற்றியும் பாடி உள்ளார். தலைப்பே அற்புதம்.

கலாம் என்ற கலங்கரை விளக்கு
எளிய வாழ்க்கை பிறர்க்கு எட்டாத அறிவு கனிவான இதயம் எவர்க்கும் கலங்காதத் துணிவு

சொர்க்கம்
மூட நம்பிக்கையின் அய்ந்து நட்சத்திர ஹோட்டல்
நரகம்
மூட நம்பிக்கையின் கொடிய சிறைச்சாலை
இப்படி நூல் முழுவதும் கவிதை வரிகளால் நம்மைச் சிந்திக்க வைக்கின்றார். மிகச்சிறந்த கவிதை நூலைப் படைத்த கவிஞர் ஆ.மணிவண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள். மகாகவி பாரதியாரைப் போன்று நெஞ்சில் துணிவுடன் மனதில் பட்டதை கவிதையாக்கிய தரத்திற்குப் பாராட்டுக்கள். தொடர்ந்து எழுத வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author