ஹைக்கூ உலகம் !
தொகுப்பாசிரியர் : முனைவர் கவிஞர் ம. ரமேஷ் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வெளியீடு :
ஓவியா பதிப்பகம்,
17-13-11, ஸ்ரீ ராம் வளாகம், காந்தி நகர் பிரதான சாலை, வத்தலக்குண்டு 624 202. பக்கம் : 128, விலை : ரூ. 120.
******
ஹைக்கூ பற்றிய முனைவர் பட்ட ஆய்வாளர், கவிஞர் ,முனைவர் ம. ரமேஷ்தொகுத்துள்ள நூல். பதிப்பாளர் வதிலை பிரபா அவர்களின் பதிப்புரை வரவேற்பு தோரணமாக உள்ளது. இந்த நூலை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது பொருத்தம். 11 கவிஞர்களின் 660 ஹைக்கூ கவிதைகள் நூலில் இடம் பெற்றுள்ளன.
முகநூலில் தொடர்ந்து எழுதி வரும் கவிதாயினி பிச்சிப்பூ அவர்களின் ஹைக்கூ கவிதைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் பதச்சோறாக ஒவ்வொரு கவிஞர்களுக்கும் தலா இரண்டு ஹைக்கூ கவிதைகள் மேற்கோள் காட்டி உள்ளேன்.
வறண்டு கிடக்கும் வயல்
வெடித்திருக்கிறது
பனிக்காற்றில் உதடு!
கவிதைக்கு கற்பனை அழகு. வறண்டு கிடக்கும் வயலை உதடுகளாக கற்பனை செய்து வெடித்த வயலைக் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
பட்டாம்பூச்சி அமர
உடைகிறது
பனித்துளி!
மலரின் மீதுள்ள பனித்துளி மீது பட்டாம்பூச்சி அமர்ந்ததும் உடையும் பனித்துளியை படிக்கும் வாசகர்கள் மனக்கண்ணில் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
பதிப்பாளர் வதிலை பிரபா அவர்களின் ஹைக்கூ கவிதைகளும் இந்த நூலில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. அவற்றிலிருந்து இரு ஹைக்கூ கவிதைகள் உங்கள் பார்வைக்கு!
வீழ்ந்து கிடக்கிறது
தார்ச்க் சாலையெங்கும்
மலைஉச்சி!
உயரம் கீழே என்ற முரண்சுவை மட்டுமல்ல உயரத்தில் இருந்தாலும் ஒரு நாள் கீழே வர வேண்டும் என்ற வாழ்வியல் தத்துவம் கூறும் விதமாகவும் உள்ளது.
சலனமற்ற குளம்
மிதந்து கொண்டிருக்கிறது
உதிர்ந்த இலை!
சப்பானியக் கவிஞர்களைப் போல இயற்கையைக் காட்சிப்படுத்தி வென்றுள்ளார்.
கவிஞர் பானால் சாயிராம் அவர்களும் முகநூலில் எழுதி வருபவர். அவரது 2 ஹைக்கூ கவிதைகள்.
விற்றன அகல்விளக்குகள்
குடிசைக்குள் குயவன் திரும்ப
நுழைகிறது நிலவொளி!
ஊருக்கே ஒளி தரும் விளக்கு விற்கும் குயவன் வாழ்க்கை இருளில் தான் உள்ளது. இயற்கையாக வரும் நிலவு தான் அவனுக்கு ஒளி என்று உணர்த்தியது சிறப்பு.
அசை போடாமல் நிற்கிறது
வைக்கோலைத் தின்ற
வயல் பொம்மை!
வயல் பொம்மை உயிரற்றது. அசை போடுவது இல்லை. ஆனால் உள்ளே இருப்பது வைக்கோல் என்பதையும் கவிப்பார்வைப் பார்த்து உள்ளார் கவிஞர் அரவிந்தன். இந்த நூலில் இடம்பெற்றுள்ள 11 கவிஞர்களுமே முகநூலில் எழுதி வரும் கவிஞர்கள்.
பட்டாம்பூச்சி
கூடவே பறக்கிறது
சிறுவன் பார்வை!
சிறுவன் பார்வை மட்டுமல்ல, இரசனையுள்ள அனைவரின் பார்வையும் பட்டாம்பூச்சியைத் தொடர்வது இயல்பு.
கோலமிடாப் புள்ளிகள்
அழகாகத் தான் இருக்கிறது
மான்கள் !
புள்ளிமான்களின் புள்ளியை ரசித்துப் பார்த்ததன் விளைவாக ஒரு ஹைக்கூ பிறந்து உள்ளது. கவிஞர் பெ. மதிவாணன் அவர்களின் இரண்டு ஹைக்கூ கவிதைகள் உங்கள் ரசனைக்கு!
சிக்கனத்தைக் கடைப்பிடிக்க
ஆடம்பரமாய செய்கிறார்கள்
விளம்பரம்!
நாட்டு நடப்பை முரண்சுவையுடன் எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று.
மணல் கடத்தல்
முற்றிலும் நின்று விட்டது
நீர்வரத்து!
மூன்றாவது வரியில் தரும் அதிர்ச்சி என்ற ஹைக்கூ யுத்தியுடன் இன்றைய நாட்டு நடப்பை உணர்த்தியது சிறப்பு.
கவிஞர் புதுகை தீ.இர.
எதிர்எதிரே வீடு!
எதுவும் தெரியாது
அடுக்குமாடி குடியிருப்பு!
நெருக்கமாக வீடுகள் தூரமாக மனசுகள் யாரையும் தெரிந்து கொள்ளாத இயந்திர வாழ்வு அடுக்கக வாழ்வு என்பதை உணர்த்தியது நன்று.
உயிர் போன பிறகும்
சித்ரவதை
இறைச்சிக் கடையில் ஆடு!
கொத்துக்கறி என்று கொத்துவதை உற்றுநோக்கி இறந்த பின்னும் ஆடு அடையும் இன்னலைப் பார்த்து இரங்கி வடித்த ஹைக்கூ நன்று.
கவிஞர் சோமு. சக்தி அவர்களின் ஹைக்கூ இரண்டு.
பிள்ளை தலையில் பேன்
திட்டாமற் பொறுக்கித் தின்னும்
தாய்க்குரங்கு!
இக்காட்சியினைக் கண்ட அனுபவம் எனக்குண்டு. மிகவும் ரசித்துப் படித்தேன் இந்த ஹைக்கூவை.
நுரை தள்ளிக் கிடக்குது
சாயப்பட்டறைக் கழிவ நீரால்
விவசாயியின் விளை நிலம்!
விளைநிலங்களை மனசாட்சியே இன்றி சேதப்படுத்தி வரும் அவலத்தை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.
கவிஞர் முல்லைவாசன் அவர்களின் இரண்டு ஹைக்கூ..
வாயில்லாப்பூச்சி
எப்படிக் கடித்தது
செருப்பு!
வாயே இல்லையே எப்படி கடித்தது என்ற கேள்வியை எழுப்பி சிந்திக்க வைத்துள்ளார்.
காயலாங்கடையில் தராசு
கையில் கொள்ளிச் சட்டி
நீதி தேவதை!
மக்களுக்கு எதிராக வரும் சில தீர்ப்புகளைப் பார்த்து நொந்து வெந்து எழுதியுள்ள ஹைக்கூ சிந்திக்க வைத்தது.
கவிஞர் கி.மூர்த்தி அவர்களின் ஹைக்கூ இரண்டு!
மாமியார் வீட்டில்
தயங்கி நடக்கிறது
மருமகள் கொலுசு!
ஆரம்பத்தில் மருமகள் கொஞ்சம் அடக்கி வாசிப்பதை கொலுசை குறியீடாக வைத்து வடித்த ஹைக்கூ நன்று.
முதல் கவிதை
பாதுகாப்பாய் இருக்கிறது
செய்தித்தாள்!
படைபாளிகள் முதல் படைப்பை பத்திரமாக பத்திரப்படுத்தி வைக்கும் உண்மையை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.
கவிஞர் வேலூர் இளையவன் ஹைக்கூ இரண்டு.
தண்ணீர் இல்லை
யார் சொன்னா கேட்பார்
ஆற்றில் இறங்கும் கள்ளழகர்!
ஆம். தண்ணீரே இல்லை, தொட்டியில் இறங்குகிறார், இதை ஆற்றில் இறங்குவதாகச் சொல்வது முறையோ? இறங்க வேண்டாம் என்று யார் சொன்னால் கேட்பார் என்ற கேள்வி சிந்திக்க வைத்தது.
அவதாரப் புருசன்
கட்டியவளை தீயில் இறக்கினான்
அகலிகை மீண்டும் கல்லானாள்!
அவதாரமே ஆனாலும் கட்டிய மனைவியை தீயில் இறங்க வைத்தது குற்றமே என்று கருதி அகலிகை திரும்பவும் கல்லானாள், புதிய சிந்தனை.
கவிஞர் முனைவர் ம. ரமேஷ் ஹைக்கூ இரண்டு.
வாய் இல்லாமல்
உடல் பருத்திருக்கிறது
சோளக்காட்டு பொம்மை!
வாய் இல்லாமல் உடல் எப்படி பெருத்தது என்ற கேள்வியைக் கேட்டு சிந்திக்க வைத்துள்ளார் .
பலத்தக்காற்று
சாய்கிறது
விவசாயி மனம்!
பலத்தக்காற்று அடித்தால் பயிர்கள் சாய்ந்துவிடும் அதனை எண்ணி விவசாயி மனமும் சாய்ந்துவிடும்.உழவர்களின் உள்ளது உணர்வை ஹைக்கூ வாக வடித்து வெற்றி பெற்றுள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூலை தொகுத்த முனைவர் கவிஞர் ம. ரமேஷ் அவர்களுக்கும் பதிப்பித்த கவிஞர் வதில்லை பிரபா அவர்களுக்கும் பாராட்டுக்கள். ஹைக்கூ எழுந்திடும் புதிய கவிஞர்கள் வாசிக்க வேண்டிய நல்ல நூல் .