Web team
மெல்ல விரியும் சிறகுகள் !
நூல் ஆசிரியர் : வ. பரிமளா தேவி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
ஓவியா பதிப்பகம்,
17-13-11 ஸ்ரீராம் வளாகம், காந்தி நகர் முக்கியச் சாலை,
வத்தலக்குண்டு 624 202. பக்கம் 96, விலை ரூ.90
“மெல்ல விரியும் சிறகுகள்” நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. பதிப்பாளர், இனிய நண்பர் வதிலை பிரபாவுக்கு பாராட்டுக்கள். நூல் ஆசிரியர் கவிஞர் வ. பரிமளாதேவி அவர்கள் பட்டிவீரன்பட்டி பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தினமலர் நாளிதழ் வழங்கிய ‘இலட்சிய ஆசிரியர்’ விருது பெற்றவர். பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் முகநூலில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருபவர்.
இந்த நூலை மதிப்புரைக்காக எனக்கு அனுப்பி வைத்த நூலாசிரியரின் கணவர் கவிஞர் பா. தனராஜ் அவர்களுக்கு நன்றி. இவரைப் பற்றி நூலாசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ள வைரவரிகள் காண்க.
“என்னை விட என் மீதும், என் எழுத்தின் மீதும் அக்கரை கொண்டு, அவரை வைத்து முன்னிருப்பச் செயல் என்பதற்கேற்ப என்னை வழி நடத்திய என் அன்புக் கணவர் தன்ராஜ் அவர்களுக்கு நன்றி”.
இப்படி ஒரு கணவர் அமைந்து இருப்பது நூலாசிரியருக்கு சிறந்த வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். பெண்ணியம் பேசிடும் முற்போக்குவாதிகள் கூட தன் மனைவியின் இலக்கிய ஆர்வத்தை ஊக்கப்படுத்திட முன்வராத காலம் இது.
ஓவியா பதிப்பக உரிமையாளர் இனிய நண்பர் விதிலை பிரபா பதிப்புரை, வழக்கறிஞர் S. முத்துக்குமார், சேக்கிழார், அப்பாசாமி, கூத்தரசன், க. ஜெயச்சந்திரன் ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அழகுற அமைந்துள்ளன.
நூலின் முதல் கவிதையே முத்தாய்ப்பாக வித்தியாசமாக உள்ளது. பாருங்கள்.
அழகி!
எனக்கென்ன தெரியும் / மகாபாரதம் மறந்துவிட்டது
இராமாயணம் ரசிக்கவில்லை / இலக்கியங்கள் தெரியாது இலக்கணமோ புரியாது / அகநானூறு அறியவில்லை
புறநானூறு பொருந்தாது / பத்துப்பாட்டு படித்ததில்லை
எட்டுத்தொகை எட்டவில்லை / வளையாபதி வரி சிக்கவில்லை / கலித்தொகை கரிக்கவில்லை / கண்டதெல்லாம் கவியழகு வாசித்ததெல்லாம்… / வசமாக்கும் கவிதைகளாக
உன்னைத்தானடி / தமிழ் அழகி !
தமிழில் உள்ள சிறந்த இலக்கிய நூல்களை வரிசைப்படுத்தி தமிழ் அழகி என்று முடித்தது முத்தாய்ப்பு பாராட்டுக்கள்.
இன்றைக்கு இளைய சமுதாயம் குடியால் சீரழிந்து வருகின்றது. மதுக்கடைகளிய உடனடியாக மூடினால் மட்டும் சமுதாயத்தை சீரழிவிலிருந்து மீட்க முடியும். நூல் ஆசிரியர், ஆசிரியர் என்பதால் குடியின் கேடு உணர்த்தும் விதமாக வடித்த கவிதை நன்று.
அழிவு!
அன்று / சீதையின் கண்ணீர் / இலங்கையை அழித்தது பாஞ்சாலியின் கண்ணீர் பாரதப் போர் ஆனது!
கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது / இன்று குடித்துப் போதைவெறி /குப்புறக் கிடக்கும் வேட்டி அவிழ்ந்து மண்ணாகிப் போனவனால் / இக் குலமகள் வடிக்கும் கண்ணீர் / அழிக்கப் போகிறதா / ஆண்வர்க்கத்தை எதிர்க்கப் போகிறதா /
மது விற்பனையை / தமிழ்நாட்டை !
கவிதை எழுதுபவர் கவிஞர் அல்ல எழுதிய கவிதையாக வாழ்பவனே கவிஞன் என்றான் மகாகவி பாரதியார். தான் எழுதிய கவிதையாகவே வாழ்ந்து காட்டியவன் பாரதி. அதனால் தான் உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும் பாடல்களால் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறான் என்றும் வாழ்வான் பாரதி பற்றிய கவிதை மிகநன்று.
அக்னி குஞ்சொன்று கண்டேன்!
அந்நியப் போராட்ட்த்தில்
வார்த்தைகளால் வெட்டி வீழ்த்திய
பாட்டுப் போராளி
தீண்டாமைச் சங்கிலியறுத்துத்
தீயோரெரிய முப்புரி நூலிட்ட முண்டாசுக்காரன்.
பன்மொழி கற்றாலும்
பன்முகம் கொண்டாலும்
தமிழ்ப் பகலவன் !
மகாகவி பாரதிக்கு மிகப் பொருத்தமாக தமிழ்ப் பகலவன் என்ற பட்டம் வழங்கியது சிறப்பு. புதிய சொல்லாட்சி பாராட்டுக்கள்.
பாரதிகண்ட புதுமைப்பெண்ணாக கவிதைகளில் பெண்ணியம் பாடி உள்ளார் பெண்ணியம் கூட மிக கண்ணியமாக உள்ளது பாருங்கள்.
விண்ணைத்தொடு பெண்ணே!
அச்சம் மடம் நாணம் விட்டுவிடு
அன்பு அனுபவம் அறிவு கையிலெடு
கணவனைத் தாங்கும் உத்திரமாய் இரு
கனிவான தாயின் பாத்திரமாய் இரு
கயவரை எரிக்கும் கண்ணகி ஆகிவிடு
நல்ல நட்பின் கண்மணி ஆகிவிடு !
கனல் மணக்கும் பூக்கள் கவிதை மிக வித்தியாசமாக் உள்ளது. பாராட்டுகள்.
அயல் நாடுகளிலும் தொலைக்காட்சி உண்டு. அவர்கள் ஓய்வு நேரம் மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் எந்நேரமும் தொலைக்காட்சிக்கு அடிமையாகி வருகிறார்கள். இவர்களை மீட்டுவதற்கு ஓர் இயக்கம் தொடங்க வேண்டும்.
தொலைக்காட்சி !
கண்முன் காணும் உலகம்
வீட்டுக்குள் நுழைந்த வேதாளம்
கலவரம் தூண்டும் ஒலி ஒளி பெட்டி!
தொலைக்காட்சி இன்று தொல்லைக்காட்சியாகி விட்டதை உணர்த்தும் கவிதை நன்று .
சின்னபொண்ணு!
என்
பிள்ளைகளுக்குத் திருமணம் ஆயிடுச்சு
அவர்களுக்கும்
பிள்ளைகள் பிறந்தாச்சு
பணி ஓய்வு
காலம் இரண்டாச்சு
பாட்டியெனப் பட்டமும்
வாங்கியாச்சு
ஆனால்
என் அம்மாவுக்கு
நான் சின்னப் பொண்ணு!
இதுவும் ஒரு வித்தியாசமான கவிதை ‘டில்லிக்கு ராசா ஆனாலும் பள்ளிக்குப் பிள்ளை’ என்பதைப் போல, பாட்டியாகும் வயது வந்தாலும் ஒரு தாய்க்கு மகள் சின்னப் பொண்ணு தான் என்ற உண்மையை உணர்த்திடும் கவிதை. நூலின் சான்று அட்டையிலும் பிரகரமாகி உள்ளது.
நிலவைப் பாடாத கவிஞர் இல்லை. நிலவைப் பாடாதவர் கவிஞரே இல்லை என்பது உண்மை. நூலாசிரியர் கவிஞர் பரிமளாதேவி அவர்களும் நிலவைப் பற்றி பாடி உள்ளார்.
என்னை
நிலவுடன் ஒப்பிடாதீர்
பாதி நாள் வளர்வாள்,
மீதி நாள் தேய்வாள்
நானோ
என்றும் உன்னுடன்
முழுமையாய்!
உலகப் பொதுமறை வழங்கி தமிழுக்கு உலகளாகிய பெருமையை தேடித் தந்த திருவள்ளுவர் பற்றிய கவிதை நன்று.
அகிலம் போற்றும் அய்யன்!
உலகப் பொதுமறை தந்த தமிழன்
உலகத்திற்கே பொதுவாய்ப் போன ஆசிரியர் !
தமிழ் தமிழன் தமிழ்நாடு என்ற சொற்களையே பயன்படுத்தாமல் மூன்றுக்கும் பெருமை தேடித் தந்தவர் திருவள்ளுவர். அவரை சூரியன் என்பதும் சரிதான். உலகமே இன்று பல மொழிகளில் திருக்குறளை படித்து வியந்து வருகின்றது.
ஏதோ? என்ற கவிதையில் வேற்றுமையில் ஒற்றுமை உணர்த்தி உள்ளார். நீ, நான், நிலா கவிதையில் இடையில் எதற்கு நிலா என்று முடிப்பு நன்று. இப்படி நூல் முழுவதும் வித்தியாசமான கவிதைகள் உள்ளன. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்..
மின்மினிப் பூச்சிகள் !
தேவலோகம் சென்ற
பூலோக தேவதைகளின்
முத்துச் சிரிப்புகள் !
நல்ல கற்பனை .மணக்க கண்ணில் மின்மினிப் பூச்சிகளைக் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .காற்று பற்றிய கவிதை நன்று .
இறந்த பின்னும் பூமியில் வாழ்ந்திட வழி சொல்லும் கவிதை மிக நன்று .
சாகா வரம் வேண்டுமா ?
கம்பன் போல்
காவியம் கொடு !
காமராசன் போல்
கல்வி கொடு
கண்ணதாசன் போல்
கவிதை கொடு
அப்துல் கலாம் போல்
அறிவியல் கொடு
இதயேந்திரன் போல்
இதயம் கொடு
இருக்கும் வரை
இனிமை கொடு
இறந்தபின்னும் இருப்பாய்
இருப்பவர்கள் நினைவில் !
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் ஒரு பெண் பின் நிற்கிறாள் பொன்மொழி .இந்த நூல் ஆசிரியர் வ . பரிமளாதேவி என்ற பெண்ணின் வெற்றிக்கு அவரது கணவர் கவிஞர் பா .தனராஜ் என்ற ஆண் முன் நிற்கிறார் என்பது புது மொழி .இருவரும் எனது இல்லம் வந்தனர் .இலக்கிய ஈடுபாடு இல்லாத என் மனைவியும் இன்முகத்துடன் வரவேற்று மகிழ்ந்தார் .இலக்கிய உரையாடல் நடத்தினோம் .ஹைக்கூவின் நுட்பம் சொல்லி ஹைக்கூ எழுதிட வேண்டுகோள் வைத்தேன் ,விரைவில் ஹைக்கூ நூல் மலரும் வாழ்த்துக்கள் .
(குறிப்பு : அடுத்த பதிப்பில் எழுத்துப்பிழைகள் நீக்கி வெளியிடுங்கள்)
பக்கம் 41 முன்வரி கவிதையில் கை, கால்கள் என்பது கை, கால்காள் என்று உள்ளது. பக்கம் 53 ல் மறுத்தால் சிறை என்பது மறுத்தால் சிரை என்று உள்ளது.)