அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் அமைய உள்ள அரசு கல்லூரிக்கு மாமன்னன் ராஜேந்திர சோழன் பெயரை சூட்டுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பண்டைய சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட தொல்லியல் அடையாளங்கள் அதிகம் உள்ளன. இவைகளை உலகிற்கு எடுத்துச் செல்லும் ஆய்வுகளை தொடரும் அளவிற்கு இந்த பகுதியில் செயல்படுகின்ற கல்லூரிகளில் தொல்லியல் சம்பந்தமான பாடப்பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தின், புது சாவடியில் தமிழக அரசால் அமைய உள்ள அரசு கலைக் கல்லூரியில் தொல்லியல் சம்பந்தமான பாடப் பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்திட வேண்டியது அவசியமாகும். தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு அடுத்தபடியாக மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் தம் கங்கை வெற்றியின் நினைவாக உருவாக்கிய நினைவு சின்னம் கெங்கைகொண்ட சோழபுரம் ஆகும். இந்த நினைவு சின்னத்தை போற்றும் வகையில் இந்த பகுதி மக்களின் விருப்பத்தை ஏற்கவும் இந்த மண்ணின் பெருமையை வெளிக்கொணரும் வகையிலும் தமிழக அரசால் நிறுவப்படுகின்ற புதிய அரசு கலைக் கல்லூரிக்கு கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவிய ராஜேந்திர சோழன் பெயரை சுட்டி, மாமன்னன் ராஜேந்திர சோழன் அரசினர் கலைக்கல்லூரி என்று பெயரை தமிழக அரசு நிறுவி ராஜேந்திர சோழன் நினைவை போற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.