அரசுமுறை பயணமாக சீனாவுக்கு வந்த தஜகிஸ்தான் அரசுத் தலைவர் எமொமாலி ரஹ்மோனுடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 12ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், ஒன்றுக்கு ஒன்று உறுதியான ஆதரவளிப்பது சீனா-தஜகிஸ்தான் உறவின் மைய அம்சமாகும். வெளிப்புற சூழ்நிலை எவ்வாறு மாறினாலும் சீனாவும் தஜகிஸ்தானும் ஒன்றுக்கு ஒன்று உதவியளிக்கும் நல்ல அண்டை நாடுகளாகவும் நம்பத்தக்க நண்பர்களாகவும் கூட்டாக வளர்ந்து வரும் கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன என்றார். சீனா-தஜகிஸ்தான் நிரந்தர நட்பார்ந்த அண்டை நாட்டுறவு மற்றும் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தை இருதரப்பும் உருவாக்குவது இருநாடுகளிடையேயான உயர்நிலை அரசியல் பரஸ்பர நம்பிக்கையை வெளிப்படுத்துவதோடு, இருதரப்பு தலைமுறை தலைமுறையான நட்புறவுக்கு உத்தரவாதமும் அளிக்கும் என்றும், மேலும் நெருக்கமான சீனா-தஜகிஸ்தான் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றி இருநாட்டு மக்களுக்கு நன்மை புரிவதற்காக உங்களுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இருதரப்பும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தர கூட்டு கட்டுமானத்தை மையமாகக் கொண்டு, தங்களது வளர்ச்சித் திட்டங்களை ஒன்றிணைத்து, ஒன்று மற்றதன் வளர்ச்சி இலக்கிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
இப்பயணத்தின்போது, விவசாயம், கலாசாரம், கல்வி, உறைவிட கட்டுமானம், சந்தை கண்காணிப்பு உள்ளிட்ட துறைகளிலான 10க்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு ஆவணங்களில் இருதரப்பும் கையெழுத்திட்டன.
