இஸ்ரேலும், பாலஸ்தீன இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸும் காசாப் பகுதியில் போரை நிறுத்துவது குறித்து ஒப்பந்தத்தை எட்டியுள்ளன என்று கத்தார் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முகமத் 15-ஆம் நாளிரவு தோஹாவில் அறிவித்தார்.
இந்த உடன்படிக்கை ஜனவரி 19-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதே நாள் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் கூறுகையில், இந்த ஒப்பந்தம், மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும். முதலாவது கட்டத்தில் இஸ்ரேலும், ஹமாஸும் “முழுமையான போர் நிறுத்தத்தை” நடைமுறைப்படுத்தும். இரண்டாவது கட்டத்தில் நிரந்தர போர் நிறுத்தத்தை நனவாக்குவது குறித்து இஸ்ரேல் ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தும். மூன்றாவது கட்டத்தில் காசா பகுதியில் பெருமளவிலான மறுசீரமைப்பு பணி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடுமையான போர் முடிவுக்கு வரவிருப்பதை முன்னிட்டு, காசாப் பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான பாலஸ்தீன மக்கள் சாலைகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.