திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது.
கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெய்த அதி கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தாமிரபரணி கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது தென் மாவட்டங்களில் மழை சற்று ஓய்ந்து, வெள்ளம் வடிந்து வருகிறது. வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் தற்போது மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும் என்றும், வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.