தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்தை முன்னெடுப்பது, தூய்மையான ஆற்றல் வசதிகளின் செலவைக் குறைப்பது உள்ளிட்டவை மூலம், உலகளாவிய எரிசக்தி மாற்றி அமைக்கப்படுதலுக்கும் கார்பன் வெளியேற்றத்துக்கும் சீனா முக்கிய பங்காற்றி வருகின்றது என்று சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் முகமையின் (International Renewable Energy Agency)தலைமை இயக்குநர் பிரான்செஸ்கோ லாகாமெல்லா தெரிவித்தார்.
அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள இந்த சர்வதேச அமைப்பின் தலைமையகத்தில் சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அவர், சூரிய சக்தி, காற்று சக்தி மற்றும் மின்கலம் உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் தொடர்ந்து முன்னேற்றம் அடைவதை சீனா ஊக்குவிப்பது என்பது, அது தொடர்பான உற்பத்திப் பொருட்களின் செலவு தெளிவாக குறைந்து வருவதற்கு வழிவகுத்துள்ளன என்றார்.
சீனத் தேசிய எரிசக்தி பணியகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜூலை மாதத்தின் இறுதிவரை, சீனாவில் ஒளிவோல்ட்டா மின் உற்பத்தித் திறன் 128கோடியே 60இலட்சம் கிலோவாட்டுகளை எட்டியுள்ளது. அதன் மின் உற்பத்தி திறன், நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தியை முதன்முறையாக தாண்டியுள்ளது. ஒளிவோல்ட்டா மின் உற்பத்தியானது, மிகப்பெரிய மின் உற்பத்திக்கான ஆதாரமாக மாறியுள்ளது. இது குறித்து பிரான்செஸ்கோ லாகாமெல்லா கூறுகையில், இந்த மாற்றம், சீனாவின் எரிசக்தி அமைப்பு மாற்றத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.
