ஆசியான் பிளஸ் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் வெற்றி பெற்று கிராண்ட்மாஸ்டர் சாதனையை படைத்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 7-வது ஆசியான் பிளஸ் தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வீரர் அனுஜ் ஸ்ரீவத்ரி பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தினார்.
முதல் சுற்றில் தோல்வியடைந்த இவர் அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். இவரது இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 100வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை அனுஜ் ஸ்ரீவத்ரி தட்டிச்சென்றார்.
இவரது இந்த சாதனைக்கு பிரதமர் மோடி சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில் இந்தியா 100 கிராண்ட்மாஸ்டர்களைப் பெற்றிருப்பது வீரர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சாதனை மேலும் பல இளைஞர்களை செஸ் விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
