சீன ஊடகக் குழுமமும், ஸ்பெயினின் மீடியாப்ரோ குழுமமும் ஜூலை 27ஆம் நாள் பார்சிலோனா நகரில் ஒத்துழைப்பு குறிப்பாணையில் கையொப்பமிட்டன.
சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியொங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிக்காட்டலுடன், சீனாவும் ஸ்பெயினும் பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி வருகின்றன.
பண்பாட்டுப் பரிமாற்றத்தின் முக்கிய பாலமான ஊடகங்கள், இரு நாட்டு மக்களுக்கிடையிலான புரிந்துணர்வை முன்னேற்றுவதில் முக்கிய பங்காற்றியுள்ளன. இரு தரப்பும், இந்த ஒத்துழைப்பை வாய்ப்பாக கொண்டு, விளையாட்டுப் போட்டி, திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகியவற்றின் தயாரிப்பு, தொழில் நுட்ப புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் பரிமாற்றங்களை அதிகரித்து, மூலவளங்களைப் பகிர்ந்து கொண்டு, இரு நாட்டு ஊடகத் துறையின் வளர்ச்சியைத் தூண்ட விரும்புவதாக தெரிவித்தார்.
மீடியாப்ரோ குழுமத்தின் தலைவர் டாட்சோ பெனெட் கூறுகையில், சீன ஊடகக் குழுமத்துடன் இணைந்து, ஒத்துழைப்பு வழிமுறைகளைச் செழுமையாக்கி, இரு நாட்டு ஊடக ஒத்துழைப்பின் அடிப்படையை வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களின் நட்புறவு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை முன்னேற்றுவதற்கு பங்காற்ற எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.