சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமத்தின் ஏற்பாட்டில், ஃபூசோ-சியாமென்-ச்சாங்சோ உயர்வேக இருப்புப்பாதையின் ஃபூச்சிங் முதல் ச்சுவான்சோ வரையிலான பகுதியில், புதிய ரக அதிவிரைவு தொடர்வண்டி உயர்வேகத்தில் இயங்கும் போது அதன் புதிய தொழில் நுட்ப உபகரணங்களின் செயல்திறன் சோதிக்கப்பட்டுள்ளது. இச்சோதனையில் தொடர்வண்டியின் அதிகபட்ச வேகம் மணிக்கு 453 கிலோமீட்டரை எட்டியுள்ளது. சிஆர்-450 எனும் புதிய தலைமுறை அதிவிரைவு தொடர்வண்டி ஆய்வில் புதிய முன்னேற்றம் அடைந்துள்ளதை இது காட்டுகிறது. சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமத்திலிருந்து ஜுலை முதல் நாள் கிடைத்த தகவலின் மூலம் இது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக இச்சோதனைக்கான பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், இச்சோதனை தொடங்கிய பிறகு, பல்வேறு பணிகளும் தடையின்றி நடைபெற்று வருகின்றன. வேகம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நேயம், நுண்ணறிவு ஆகியவை மேலும் சிறப்பாக இருக்கும் தொடர்வண்டியை தயாரிப்பதற்கு இது வலுவான ஆதரவு அளிப்பதோடு, இருப்புப்பாதைத் துறையில் உயர் நிலை தொழில் நுட்பத் தற்சார்பை நனவாக்குவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.