சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஆகஸ்ட் 14 முதல் 17ஆம் நாள் வரை மியன்மாரில் பயணம் மேற்கொண்டு, தாய்லாந்துக்குச் சென்று லன்சாங்-மெகுங் ஒத்துழைப்புக்கான 9ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும் சீன, லாவோஸ், மியன்மார் மற்றும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர்களின் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 13ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், பல்வேறு துறைகளில் சீனாவுக்கும் மியன்மாருக்குமிடையேயான ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டு மக்களின் நட்புறவை வலுப்படுத்தி, சீன-மியன்மார் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது வாங் யீயின் மியன்மார் பயணத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், லன்சாங்-மெகுங் ஒத்துழைப்பானது, கம்போடியா, லாவோஸ், மியன்மார், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளுடன் சீனா கூட்டாக விவாதித்து, கட்டியமைத்து, அனுபவிக்கும் புதிய ரக மண்டல ஒத்துழைப்பு அமைப்பு முறையாகும். இது 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நடப்பு லன்சாங்-மெகுங் ஒத்துழைப்புக்கான வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் மூலம், மெகுங் ஆறு செல்லும் நாடுகளுடன் ஒத்துழைப்பு அனுபவங்களைத் தொகுத்து, அடுத்த கட்டத்திற்கான வளர்ச்சி குறித்து விவாதிக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார்.