தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, மதுசூதன் ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார், ராமச்சந்திரன் துரைராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை நோவா ஆர்ம்ஸ்ட்ராங் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அப்படியென்ன சிறப்பு அடங்கியிருக்கிறது?
‘கு.பு’ கதை!
சென்னையின் ஒரு பகுதியில் உதவி ஆணையராக இருந்து வருபவரின் மகள் காணாமல் போகிறார். அதற்கடுத்த நாள், அருகிலுள்ள பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கொலை நிகழ்ந்ததாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வருகிறது.
போலீசார் சென்று பார்த்தால், அந்த வீட்டின் மேற்புறத்தில் இருக்கிற ஒரு அறையில் ரத்தக்கறைகள் நீரில் கழுவப்பட்டிருக்கின்றன. தடயங்கள் அமிலம் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு இளம்பெண்ணின் ஆள்காட்டி விரல் மட்டும் கிடைக்கிறது.
கொலை நிகழ்ந்த அறையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தங்கியதாகத் தகவல் கிடைக்கிறது. அந்த நபர் பகுதி நேரமாக ஒரு கறிக்கடையிலும் வேலை செய்திருக்கிறார்.
அவர் எங்கே என போலீசார் விசாரித்தால், சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாகத் தகவல் கிடைக்கிறது.
அந்த அறைக்கு அருகேயுள்ள இன்னொரு அறையில் உணவு விநியோகிக்கும் பணியைச் செய்து வருகிற ஒரு இளைஞர் தங்கியிருக்கிறார். நள்ளிரவு வரை தான் வேலை செய்ததாக அவர் கூறுகிறார்.
அந்த இளைஞர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. முடிவில், அவர் சொன்னது அனைத்தும் உண்மை என்று முடிவு செய்கின்றனர் போலீசார்.
அதேநேரத்தில், தனது மகள் கொலை செய்யப்பட்டதை எண்ணி மனதுக்குள் விம்முகிறார் அந்த உதவி ஆணையர். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணையைத் துரிதப்படுத்துகிறார்.
இரண்டு நாட்கள் கழித்து, விசாரணைக்கு வந்த அதே இளைஞர் தானாக போலீசாரிடம் சரணடைகிறார். தான் ஒரு இளம்பெண்ணைக் கொலை செய்ததாகக் கூறுகிறார். அது மட்டுமல்லாமல், மேலும் இரண்டு பேரைக் கொன்றதாகச் சொல்கிறார்.
போலீசார் விசாரணை தொடர்கிறது. அந்த இளைஞர் கொலை செய்ததாகச் சொன்ன இரண்டு பேருமே உயிருடன் இருக்கின்றனர்.
அப்படியானால், அந்த இளைஞர் சொன்னது உண்மை இல்லையா? அவர் அப்படிச் சொல்லக் காரணம் என்ன? உதவி ஆணையரின் மகள் என்ன ஆனார்? அந்த அறையில் படிந்த ரத்தக்கறை யாருடையது?
இப்படிச் சில கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் நிறைவடைகிறது ‘குற்றம் புதிது’.
இந்த படத்தின் டைட்டிலை கேட்டவுடன், இது ஒரு ‘சைக்கோ த்ரில்லர்’ என்ற எண்ணம் தோன்றும். அதற்கேற்றவாறு இதன் முன்பாதி உள்ளது. பின்பாதி வேறொரு திசையில் பயணிக்கிறது.
மற்றபடி, இந்த டைட்டிலுக்கும் உள்ளடக்கத்திற்கும் பெரிதாகச் சம்பந்தமில்லை.
நிறைய திருப்பங்கள்!
’குற்றம் புதிது’ தந்திருக்கும் இயக்குனர் நோவா ஆர்ம்ஸ்ட்ராங், கிட்டத்தட்ட ‘பீட்சா’ பட பாணியில் கதை சொல்லியிருக்கிறார். அது நமக்குச் சுவாரஸ்யமான திரையனுபவத்தைத் தருகிறது என்பதே இப்படத்தின் யுஎஸ்பி.
கரண் கிருபாவின் பின்னணி இசை இப்படத்தை விறுவிறுப்பாக நகர்த்த துணை நின்றிருக்கிறது.
ஜேசன் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு பெரும்பாலான காட்சிகளில் ‘ஹேண்டி’ உத்தியைப் பின்பற்றியிருக்கிறது. அதேநேரத்தில் படத்தின் பட்ஜெட் குறைவு என்பதையும் பல பிரேம்கள் உணர்த்துகின்றன.
வெவ்வேறு அடுக்குகளில் நகரும் காட்சிகளை, கதை சொல்லல் தடைபடாத வகையில் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கமலகண்ணன்.
இது போக ஒப்பனை ஒலி வடிவமைப்பு எனப் பல நுட்பங்கள் இப்படத்தில் கவனிக்கத்தக்க வகையிலுள்ளன.
நாயகனாக நடித்துள்ள தருண் விஜய் கொஞ்சம் ‘குழந்தைத்தனமான’ முகத்தைக் கொண்டிருக்கிறார். திரைக்கதையின் நடுவே காவல் துறை அதிகாரிகள், நீதிபதியைப் பார்த்து ‘அங்கிள்’ என அழைக்க, அது நிறையவே உதவுகிறது.
அவரது பாத்திர வார்ப்பில் இருக்கிற வித்தியாசங்களை முழுமையாகக் காட்டுகிற வகையில் நடிப்பு அமையாவிட்டாலும், ‘ஓகே’ எனும்விதமாகத் தோன்றியிருக்கிறார்.
நாயகி சேஷ்விதா கனிமொழி முன்பாதியில் ‘ஜஸ்ட் லைக் தட்’ வந்து போனாலும், கிளைமேக்ஸ் பகுதியிலுள்ள காட்சிகளில் கண் கலங்க வைக்கிறார்.
அதேநேரத்தில், ‘இவரா மார்கன் படத்தில் நடித்தார்’ என எண்ண வைக்கிறார். அதுவே, இப்படம் தயாராகி எத்தனை காலம் ஆகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
சேஷ்விதாவின் பெற்றோராக வருகிற மதுசூதன் ராவ் – பிரியதர்ஷினி ராஜ்குமார், ஆட்டோ ஒட்டுநராக வரும் ராமச்சந்திரன் துரைராஜ் மற்றும் போலீஸ் கமிஷனராக வருகிற பாய்ஸ் ராஜன், இதர போலீசாராக நடித்தவர்கள் என்று சுமார் இரண்டு டஜன் பேர் இதில் வந்து போயிருக்கின்றனர்.
இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நோவா ஆர்ம்ஸ்ட்ராங்.
இதிலுள்ள காட்சிகளில் ‘லாஜிக் மீறல்’களை உற்று நோக்கத் தொடங்கினால் நிறைய பள்ளங்கள் திரைக்கதையில் தெரிய வரும்.
அதேநேரத்தில், எடுத்துக்கொண்ட கதைக்கு நியாயம் சேர்க்கும்விதமாகத் திரைக்கதை நகர்த்தப்பட்டிருக்கிறதா என்றால் ‘ஆம்’ என்றே சொல்ல வேண்டும். அதற்காக இயக்குனரைப் பாராட்ட வேண்டும்.
திரைக்கதையின் நடுப்பகுதியில் வருகிற சில காட்சிகளில் வன்முறை ததும்பும்விதமான சித்தரிப்பு இடம்பெற்றுள்ளது.
காட்சிரீதியாக இல்லாமல் போனாலும் வசனங்களில், கதாபாத்திர அசைவுகளில் அது உணர்த்தப்படுகிறது. அதுவே இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழைப் பெற்றுத் தந்துள்ளது.
அதேநேரத்தில், இதைவிட மோசமான காட்சியாக்கத்தை, சித்தரிப்புகளைக் கொண்ட பல படங்கள் ‘யு/ஏ’ சான்றிதழுடன் தியேட்டரிலும் தொலைக்காட்சியிலும் வலம் வருகின்றன. அது சரிதானா என்ற கேள்விக்கு எப்போது பதில் கிடைக்கும்?!
– உதயசங்கரன் பாடகலிங்கம்