Web team
நூல் ஆசிரியர் கவிஞர் புதுவை யுக பாரதி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நண்பர்கள் தோட்டம் ,46. மாரியம்மன் கோவில் தெரு ,
சீவானந்தா புரம்,புதுச்சேரி .605008. பேச 9751533634. விலை ரூபாய் 90.
வாழும் கவிஞர்களில் மரபுக்கவிதை ,புதுக்கவிதை, ஹைக்கூக்கவிதை என மூன்று வகை பாக்கள் எழுதுவதில் வல்லவர். நல்லவர் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன்அவர்கள். வணக்கம் வள்ளுவ நூல் எழுதினார் . கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் 80 வது அகவை தொட்டு இருப்பதால் அவர் பற்றியே 80 துளிப்பாக்கள் எழுதி நூலாக்கி வணக்கம் தமிழன்ப என்று தலைப்பிட்டு உள்ளார். இந்த நூல் ஆசிரியர் கவிஞர் புதுவை யுக பாரதி.துளிப்பாக்கள் மூலம் முதல் முறையாக வாழ்க்கை வரலாறு வடித்து உள்ளார். பாராட்டுக்கள்
முனைவர் பா .இரவிக்குமார் ,பாவலர் புதுவை சீனு தமிழ்மணி இருவரின் அணிந்துரையும் மிக நன்று .நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்து உள்ளன .பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் பிறந்தவர் தமிழன்பன் .அவரும் ஒரு பகுத்தறிவாளர் .அதனை உணர்த்திடும் துளிப்பா தீ , மழை முரண் சுவையுடன் மிக நன்று .
பகுத்தறிவுத்தீ பிறந்தகத்தில்
பகுத்தறிவு மழை
ஈரோடு தமிழன்பன் !
இன்று தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாகி விட்டன .அதில் வரும் அறிவிப்பாளர்கள் நாளும் தமிழைச் சிதைத்து வருகின்றனர் தமிழ்க்கொலை நாளும் நடந்து வருகின்றது. கவிஞர் ஈரோடு தமிழன்பன்அவர்கள் ஒரு காலத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து நல்ல தமிழை தமிழாகவே உச்சரித்தவர். அதனை உணர்த்திடும் துளிப்பா .
வண்க்கம் நந்ரி
தமிழ்ச் சொ( கொ )ல்லும் தொலைக்காட்சிகளில்
தூய தமிழ்ச் சொல்லி தமிழன்பன் !
.
ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன்அவர்கள் சென்னை புதுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர் .சிறந்த மாணவர்கள் பலரை செதுக்கிய சிற்பி அவர் . அதனை நினைவூட்டும் துளிப்பா .
தமிழன்பப் பேராசான் ஊற்றிக் கொடுக்க
இலக்கிய மது குடித்தது
சென்னைப் புதுக் கல்லூரி !
ஈரோடு என்ற சொல்லைக் கேட்டவுடன் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தந்தை பெரியார் .அதற்கு அடுத்து நினைவிற்கு வருவது ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன்அவர்கள்தான். காரணம் தன் பெயரோடு தான் பிறந்த ஊரையும் சேர்த்துக் கொண்டு ஈரோட்டுக்குப் புகழ் சேர்த்து வருபவர். அதனை உணர்த்திடும் துளிப்பா நன்று .
ஈரோட்டில் பெரியாருக்கு அடுத்துத்
தமிழன்பன் மிகையில்லை
பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் !
துளிப்பாக்களில் ஒரு கவிஞரின் வரலாற்றை செதுக்கிய நூல் ஆசிரியர் கவிஞர் புதுவை யுக பாரதி அவர்களுக்கு பாராட்டுகள். ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன்அவர்கள் வரலாறு அவர் இயற்பெயர் செகதீசன், பெற்றோர் நடராசன் ,வள்ளியம்மாள் . அவர் பிறந்த நாள் 28.09.1933,அவர் படைத்த நூல்கள் இப்படி யாவும் உள்ளன .
மகாகவி பாரதியை வாழும் காலத்தில் உரிய அங்கிகாரம், மரியாதை, விருது தரத்தவறிய குற்றவாளிகள் நாம் .ஆனால் கவிஞர் ஈரோடு தமிழன்பன்அவர்ககளுக்கு வாழும் காலத்திலேயே செய்திட்ட சிறப்பு இந்நூல். அவர்க்கு மிகவும் பிடித்தமான துளிப்பா மூலமே வரலாறு வடித்து சிறப்பு .
ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன்அவர்ககளுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது .அதனையும் துளிப்பாவில் பதிவு செய்துள்ளார் .
அடுக்கடுக்காய் பெருமைகள்
தமிழக அரசுக்கு
கலைமாமணி தமிழன்பன் !
பொதுவாக சிலர் சொல்வதுண்டு மகாகவி பாரதிக்குப் பிறகு பாரதி அளவிற்கு யாரும் எழுதவில்லை என்று .ஆனால் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன்அவர்கள் பஹ்ரதியை நெருங்க விட்டார் என்பது உண்மை .அதனை உணர்த்திடும் துளிப்பா .
மரபுப்பா -புதுப்பா -துளிப்பா
பாரதியின் பாட்டுப்பயணம் தொடர்கிறது
மகாகவி ஆகிறார் தமிழன்பன் !
சற்று மிகையோ என்று சிலர் எண்ணலாம்.ஆனால் ஈரோடு தமிழன்பன் அவர்கள் படைப்புகளை முழுவதும் படித்தால் மிகையன்று உண்மையே என உணரலாம் .
உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் விரும்பும் ஒன்று என்னவென்றால் ஈழத்துச் சகோதர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் .அங்கு தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதே .உலகத் தமிழர்களின் தாகம் கவிஞர் ஈரோடு தமிழன்பன்அவர்களுக்கும் உண்டு.அதனை உணர்த்திடும் துளிப்பா நன்று .
என்னருமை ஈழமே
நம்பாதே தமிழ் நாட்டை
தமிழன்பனின் தாகம் தமிழீழம் !
கொடூரன் ராஜபட்சே மனம் திருந்த மாட்டான் .ஒருவேளை அவனே திருந்தி தனி ஈழம் தந்தாலும் இங்கு உள்ள சிலர் வேண்டாம் என்பார்கள் இன்னும் ஒன்றுபட்ட இலங்கை என்று ஒத்துவராத பழைய பல்லவியை பாடிக்கொண்டு இருப்பதை உணர்த்தும் விதமாக நம்பாதே தமிழ் நாட்டை என்றது சிறப்பு .
கவியரசு கண்ணதாசனிடம் தமிழ்ச்சொற்கள் பயன்படுத்த வேண்டி கெஞ்சி நிற்கும் என்பார்கள் .அது போல கவிஞர் தமிழன்பன் பற்றி எழுத தமிழ்ச்சொற்கள் வரம் வேண்டியதாக வடித்த துளிப்பா மிக நன்று .
ஓ .. பாவலனே
எங்களை வைத்துத் தமிழன்பனைப் பாராட்டு
வரம் கேட்கும் தமிழ்ச்சொற்கள் !
நாட்டில் நடக்கும் ஊழல் கண்டு ஒரு படைப்பாளிக்கு சினம் வரும். அறச் சீற்றம் வரும் .பாரதிக்கும் வந்தது .மனசாட்சியுள்ள படைப்பாளிகளுக்கு உறுதியாக வரும் .கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கும் கோபம் வந்தது. அது படைப்பில் வெளி வந்தது .
ஊமை வெயில்
சுடுகிறது தமிழன்பனுக்கு
ஊழல் !
முனைவர் பா .இரவிக்குமார் ,அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டபடி எல்லா துளிப்பாவிலும் தமிழன்பன் என்ற சொல் வருவதைத் தவிர்த்து இருக்கலாம் . வணக்கம் தமிழன்ப என்ற நூலின் தலைப்பே உணர்த்தி விடும் .
ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் வரலாறு துளிப்பாவில் வடித்ததில் , புதுவை தமிழகத்தை முந்தி விட்டது .நூல் ஆசிரியர் கவிஞர் புதுவை யுக பாரதி அவர்களின் புதிய முயற்சிக்கு, முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள் .