சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்று திறனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளும் பிரமாண்ட விளையாட்டு போட்டியாக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டியின் இந்தாண்டு விளையாட்டு போட்டிகள் இன்று நிறைவு பெற்றுள்ளன.
மாவட்ட , மண்டல அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற வீரர் , வீராங்கனைகள் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கிய இறுதி போட்டிகளில் பங்கேற்றனர். கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த இந்த போட்டிகளானது இன்று நிறைவு பெற்றுள்ளது. இந்த நிறைவு விழா நிகழ்ச்சி சென்னை , நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.
முதலமைச்சர் கோப்பை நிறைவு விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்திய அளவில் விளையாட்டு துறையின் தலைநகராக தமிழ்நாடு மாறி வருகிறது. தமிழ்நாட்டின் ஒலிம்பிக் என்ற அளவில் முதலமைச்சர் கோப்பை உயர்ந்துள்ளது. முதலமைச்சர் இந்த விளையாட்டு திறனை கூடுதலாக இருக்கும் திறனாக (Extra curricular) பார்க்கவில்லை. இதனை முக்கிய திறனாக (Main curricular) பார்க்கிறார்.
இந்த முதலமைச்சர் கோப்பையை நடத்தக்கோரி உத்தரவிட்டது மட்டுமல்லாமல் ரூ.83 கோடி ஒதுக்கி அதில் ரூ.37 கோடி பரிசுக்காக மட்டுமே ஒதுக்கியுள்ளார் முதலமைச்சர். கடந்த வருடம் 6 லட்சம் வீரர்கள் கலந்து கொண்ட நேரத்தில் இந்தாண்டு 11.53 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.
ஊரக பகுதிகளில் உள்ளவர்களும் விளையாட்டில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.86 கோடி செல்வீட்டில் 12 ஆயிரம் கிராமங்களுக்கு 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய Dr கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முதலமைச்சர் கோப்பையில் கலந்து கொண்டு முதல் 3 இடங்கள் பிடித்த சென்னை , செங்கல்பட்டு, கோவை விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
மேலும், விளையாட்டில் கலந்து கொண்ட அனைத்து மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். இந்த விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்த வேலை செய்த அனைத்து அதிகாரிகள் , தன்னார்வலர்கள் என அனைவருக்கும் நன்றி” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசினார்.
இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் சென்னை 105 தங்க பதக்கத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. 31 தங்க பதக்கங்களுடன் செங்கல்பட்டு 2ஆம் இடமும், 23 தங்க பதக்கங்களுடன் கோவை மூன்றாம் இடமும், 21 தங்க பதக்கங்களுடன் சேலம் 4வது இடமும் பிடித்துள்ளது. இந்நிகழ்வில் முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா நினைவு பரிசை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்.