சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல் ஆரம்பம் ஆகிறது. இன்றைய நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
48 நாள்கள் விரதத்திற்கு பிறகு இருமுடி கட்டிக்கொண்டு காடு மேடு மலையெல்லாம் கடந்து சபரிமலை நோக்கி பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு சென்று ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு தீராத பிரச்னைகள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.
அதன்படி, கார்த்திகை மாதம் 1ம் தேதியை ஒட்டி மாநிலம் முழுவதும் இன்று அதிகாலையிலேயே ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். ஆம், தமிழகம் முழுவதும் இருக்கின்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு, மாலை அணிந்து கொண்டனர்.
வரும் டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் மண்டல பூஜை, அடுத்த வருடம் ஜனவரி 14ம் தேதி நடைபெறும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று திறக்கப்பட்டது. அதாவது, டிசம்பர் 26 இரவு 11 மணிக்கு நடை மூடப்படும். பின்னர், மகர விளக்கிற்காக மீண்டும் டிசம்பர் 30 அன்று மாலை நடை திறக்கப்படும்.