சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் நவம்பர் 18ஆம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் சந்திப்பு நடத்தினார்.
வாங்யீ கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்தியத் தலைமையமைச்சர் மோடியுடன் அண்மையில் கசானில் சந்திப்பு நடத்தினார். சீனாவும் இந்தியாவும், இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துகளைச் செயல்படுத்தி, தத்தமது மைய நலன்களுக்கு மதிப்பளித்து, பேச்சுவார்த்தையின் மூலம் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் சமாளித்து, இரு நாட்டுறவு வெகுவிரைவில் சீரான மற்றும் நிதானமான பாதைக்குத் திரும்புவதை முன்னேற்ற வேண்டும் என்றார்.
மேலும், வளரும் அண்டை நாடுகளான சீனாவும் இந்தியாவும், தத்தமது வளர்ச்சியை வாய்ப்பாகக் கொண்டு, கூட்டு வளர்ச்சியைக் கூட்டாக நனவாக்க வேண்டும். வளரும் நாடுகளுக்குரிய உரிமை நலன்களுக்கும் மட்டுமல்லாமல், உலகின் பலதுருவமயமாக்கப் போக்கிற்கும் இது துணை புரியும் என்றும் வாங்யீ சுட்டிக்காட்டினார்.
ஜெய்சங்கர் கூறுகையில், தொடர்புடைய பேச்சுவார்த்தை அமைப்பு முறையை மீண்டும் துவங்கி, தொடர்பை வலுப்படுத்துவதன் மூலம் இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை நிலைநிறுத்த இந்தியா விரும்புகிறது என்றார். மேலும், இந்திய-சீனத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற இந்தியா விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அதோடு, சர்வதேச விவகாரங்களில் இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்காற்றி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இரு நாட்டு ஒத்துழைப்புக்கான உள்ளார்ந்த ஆற்றலை இது வெளிப்படுத்தியுள்ளதாகவும், ஜி20, பிரிக்ஸ் உள்ளிட்ட பலதரப்பு அமைப்பு முறையில் இரு நாடுகளின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.