முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2 நாள் தூத்துக்குடி வருகை : முழு விவரம் இதோ…

Estimated read time 0 min read

தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று பிற்பகல் தூத்துக்குடிக்கு வர உள்ளார்.

இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வர உள்ளார். மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மினி டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்த மினி டைடல் பார்க்கானது 32 1/2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 4 தளங்களை கொண்டுள்ளது. பல்வேறு ஐடி நிறுவனங்கள், உணவு கூடங்கள், உடற்பயிற்சி கூடம், கலையரங்கம் வாகனம் நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகளை இந்த டைடல் பார்க் கொண்டுள்ளது.

அதனைத் திறந்து வைத்த பிறகு, மாலை 5 மணியளவில், தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் கட்சி நிகழ்வில் திமுக தலைவராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

அதன் பிறகு நாளை காலை 9 மணி அளவில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். அங்கு புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு, மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்ற உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் வாயிலாக விரிவாக்கம் செய்யப்பட்டு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு பயிலும் 75 ஆயிரம் மாணவிகள் பயன்பெறுவர்.

அதன் பிறகு, தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு வழியாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தூத்துக்குடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளதால் தூத்துக்குடி பிரதான சாலைகளில் திமுக கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author