“பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது” கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்!

Estimated read time 1 min read

சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதன் காரணமாக அந்த தேதியில் தேர்வு நடத்தக்கூடாது வேறு தேதிக்கு தள்ளி வைக்கவேண்டும் என தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் வேண்டுகோளை முன் வைத்து வருகிறார்கள்.

குறிப்பாக, சு.வெங்கடேசன் எம்.பி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் வேண்டுகோள் வைத்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதி இருந்தார்கள்.

அவர்களை தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது என மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியதாவது ” பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவர். இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறை நாட்களாக தமிழ்நாடு அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்தப் பொங்கல் பண்டிகையைப் போலவே, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் இதே காரணத்திற்காக ஜனவரி 2025இல் நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர்கள் தேர்வு ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை வேறொரு பொருத்தமான நாட்களில் மாற்றியமைக்க தேவை உள்ளது.

அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தேர்வுகளுக்கு எளிதில் வர இயலும் என்றும் முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் தேசிய தேர்வு முகமை யுஜிசி-நெட் தேர்வை நடத்தவில்லை.

ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து பொருத்தமான வேறு நாட்களுக்கு மாற்றியவேண்டும்” எனவும், மு.க.ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author