சீனாவின் BYD வாகன நிறுவனம் ஜனவரி 13ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2024ஆம் ஆண்டு, இந்நிறுவனம் ஏற்றுமதி செய்த மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 17 ஆயிரத்து 200ஐ எட்டி, உலகச் சந்தையில் முதலாவது இடத்தை வகித்துள்ளது. எதிர்காலத்தில், இந்நிறுவனம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு, புதிய எரியாற்றல் தொழிலின் வளர்ச்சியை முன்னேற்றும் என கூறப்பட்டுள்ளது.
சீன அரசு 13ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு, சீனச் சரக்குகளின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு 43 லட்சத்து 85 ஆயிரம் கோடி யுவானாகும். இது, 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 5 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றில் மிக உயர் பதிவை எட்டியுள்ளது.
சீன வணிக அமைச்சகத்தைச் சேர்ந்த ஆய்வகத்தின் பட்டக் கமிட்டியின் உறுப்பினர் பை மிங் கூறுகையில், வர்த்தக பாதுகாப்புவாதம் மற்றும் புவியமைவு அரசியல் மோதல்கள் மோசமாகி வருகின்ற பின்னணியில், சீனாவின் அன்னிய வர்த்தகம் இத்தகைய சாதனைகளைப் பெறுவது, சீன வளர்ச்சியின் உறுதித் தன்மை மற்றும் உயிராற்றலைக் காட்டியுள்ளது என்றார்.
தற்போது, உலக வர்த்தகம் கடும் அறைக்கூவல்களை எதிர்நோக்கி வருகிறது. ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின்படி, 2025ஆம் ஆண்டு, சர்வதேச வர்த்தகத்தின் அதிகரிப்பு விகிதம் 2024ஆம் ஆண்டில் இருந்த 3.1 விழுக்காட்டிலிருந்து 3.4 விழுக்காடாக அதிகரிக்கும்.
வெளிநாட்டுத் தேவை மீட்சியடைந்து வருகிறது என்றும், திறப்பு மற்றும் ஒத்துழைப்பு, பல்வேறு நாடுகளின் பொது விருப்பமாகும் என்றும் இது வெளிப்படுத்தியுள்ளது. உலகின் முதலாவது பெரிய சரக்கு வர்த்தக நாடான சீனா, அறைக்கூவல்களைச் சமாளித்து, வெளிநாட்டு வர்த்தகத்தைத் தொடர்ந்து நிதானப்படுத்தி, உலகத்துடன் வளர்ச்சி நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றது குறிப்பிடத்தக்கது.
