பாஜக நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது…

Estimated read time 1 min read

மதுரையில் பாஜக பிரமுகர் கொலை செய்த வழக்கில் ரைஸ் மில்லில் வேலை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவரான சக்திவேல் (35) இவர் மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் தேவர் குறிஞ்சிநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்ட பாஜக OBC அணியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

மேலும் இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் சக்திவேல் தனது வீட்டில் அருந்து வண்டியூர் டோல்கேட் அருகே சங்குநகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான குடோனுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3க்கும் மேற்பட்டோர் பைக்கில் சென்ற சக்திவேலை விரட்டியுள்ளனர்.

அப்போது சக்திவேல் தப்பியோட முயன்ற நிலையில் அவரை விரட்டி மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அப்போது அவர் தப்பியோட முயன்ற நிலையிலும் விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர். இதையடுத்து அவரது உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் சக்திவேலின் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சரக்கு வாகனம் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சக்திவேலுடன் ஒரு நபர் பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதனடிப்படையில் காவல்துறையினர் டோல்கேட் உள்ளிட்ட சம்பவம் நடைபெற்ற சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், மதுரை பாஜக நிர்வாகி சக்திவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் சக்திவேலின் ரைஸ்மில்லில் வேலை செய்து வந்து செல்லூரை சேர்ந்த ரஞ்சித் மற்றும் மருது ஆகிய இருவரை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்தனர். 3 மாதமாக ஊதியம் வழங்காமல் சக்திவேல் இழுத்தடித்த நிலையில், ஆத்திரத்தில் சக்திவேலை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நேற்றிரவு மதுபோதையில் இருவரும் சக்திவேலிடம் செல்போனில் வாக்குவாதம் செய்த நிலையில், இன்று காலை ஊதியமாக 70 ஆயிரம் ரூபாய்க்கு பதில் 20 ஆயிரம் கொடுத்த போது வாக்குவாதம் ஏற்பட்டதில் சக்திவேலை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author