சுமார் 2026ஆம் ஆண்டு சாங் ஏ-7 (Chang’e-7) என்ற சந்திர ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்தும் என சீனா சமீபத்தில் அறிவித்துள்ளது.
அதன்படி, நிலவின் தென்துருவத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மூலவளங்கள் குறிப்பாக நீர் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து, சாங் ஏ-8 திட்டத்தில், நிலவின் மண்ணைப் பயன்படுத்தி வாழ்விடங்களை கட்டுவது தொடர்பான தொழில்நுட்பங்களின் சோதனை மேற்கொள்ளப்படும் என்று சீன சந்திர ஆய்வுத் திட்டத்தின் தலைமை வடிவமைப்பாளர் வு வெய்ரென் சிசிடிவி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சாங் ஏ-7 திட்டத்தில், நிலவின் தென்துருவிலுள்ள பள்ளங்களில் நீர் பனிக்கட்டி இருப்பதற்கான ஆதாரங்கள் ஆராயப்படும். அத்தகைய நீர் பனிக்கட்டி இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அது எதிர்கால சந்திர ஆய்வுத் திட்டப் பணியில் ஒரு புரட்சியை உண்டாக்கக் கூடும்.
வு வெய்ரென் கூறுகையில், சுமார் 2028ஆம் ஆண்டில் சாங் ஏ-8 திட்டம் மேற்கொள்ளப்படும். அதற்காக, சந்திர மண்ணால் செங்கல் தயாரிக்கும் உலகின் முதலாவது சாதனத்தை நாங்கள் தற்போது உருவாக்கியுள்ளோம். இந்த அமைப்பானது, சூரியாற்றலைப் சேகரித்து நிலவுக்கு அதனை அனுப்பும். அங்குள்ள எங்கள் சாதனங்கள் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருகிய பொருள்களை பல்வேறு வடிவ செங்கற்களாக தயாரிக்கும் என்று தெரிவித்தார்.