உதகை ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் கோடைசீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. கோடை விழாவின் 3-வது நிகழ்ச்சியாக உதகை அரசு ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி கடந்த சனிக்கிழமை துவங்கியது. சிறப்பு அம்சமாக 2 லட்சம் ரோஜா மலர்களைக் கொண்டு கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்த உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 80 ஆயிரம் மலர்களைக் கொண்டு இரட்டை டால்பின்ஸ், சிப்பிக்குள் முத்து, கடற்குதிரை, பென்குயின்கள், ஆமை, வண்ண மீன், நீலத்திமிங்கலம், பப்பர் ஃபிஷ் போன்றவை மலர்களால் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கிறது. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ரோஜா மலர் அலங்கார உருவங்கள் மட்டுமன்றி ரோஜா பூங்காவில் 4200 ரகங்களில் 32 ஆயிரம் செடிகளில் பூத்துக் குலுங்கும் பல வண்ண வண்ண ரோஜாக்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளன. ரோஜா பூங்காவில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ரோஜா மலர் அலங்கார உருவங்கள் முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
இந்த நிலையில் உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் 20 வது ரோஜா கண்காட்சியின் நிறைவு நாளான இன்று மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவில் குவிந்தனர். இதனால் பூங்காவில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 3 நாட்கள் நடைப்பெற்ற ரோஜா கண்காட்சியை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்த நிலையில், ரோஜா கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால், மேலும் 2 நாட்களுக்கு ரோஜா கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.