ஒவ்வொரு ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் போதும் அந்த சீசனில் அதிக ரன்கள் எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றும் வீரருக்கு ஊதா நிற தொப்பியையும் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனுக்கான அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் குஜராத் அணியின் நட்சத்திர துவக்க வீரரான சாய் சுதர்சன் 759 ரன்கள் உடன் முதலிடத்தில் இருக்கிறார்.
நிக்கோலஸ் பூரானை முந்த காத்திருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் :
அவரைத் தொடர்ந்து மும்பை அணியின் வீரரான சூரியகுமார் யாதவ் 717 ரன்கள் உடன் இரண்டாவது இடத்திலும், குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 650 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். அதேவேளையில் இந்த தொடருக்கான இறுதிப் போட்டியில் விளையாட இருக்கும் பெங்களூரு அணியை சேர்ந்த நட்சத்திர வீரரான விராட் கோலி 614 ரன்கள் எடுத்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
மேலும் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 603 ரன்களுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார். இவர்கள் இருவருமே சாய் சுதர்சனை எட்டுவதற்கு கிட்டத்தட்ட 140 ரன்கள் தேவை என்பதால் இந்த போட்டியில் சாய் சுதர்சனின் அதிக ரன்கள் சாதனையை எட்டுவது கடினம். அதனால் ஆரஞ்சு தொப்பி சாய் சுதர்சனுக்கு கிடைக்கவே அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் அதிக ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிக்கோலஸ் பூரானை மிஞ்ச பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அற்புதமான வாய்ப்பு காத்திருக்கிறது. இந்த சீசனில் மட்டும் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக நிக்கோலஸ் பூரான் 40 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் 39 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இதன் காரணமாக இன்றைய இறுதிப்போட்டியில் அவர் வெறும் 2 சிக்ஸர்களை அடித்தால் கூட இந்த சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்திற்கு செல்வார். ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டாவது குவாலிபயர் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 8 சிக்ஸர்களை விளாசிய அவர் நிச்சயம் இந்த போட்டியில் இரண்டு சிக்ஸர்களை அடித்து பூரானை முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக பிரசித் கிருஷ்ணா 25 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் பெங்களூரு அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹேசல்வுட் 24 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தில் இருப்பதினால் இந்த போட்டியில் நான்கு அல்லது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினால் அவர் முதலிடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.