இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் இங்கிலாந்து முன்னிலை வகிக்கும் அத்தொடரின் இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்க உள்ளது.
அந்தப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே காணப்படுகிறது. ஏனெனில் ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் முழுமூச்சுடன் இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அதனால் கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்த அவர் மீண்டும் குணமடைந்து தற்போது விளையாடி வருகிறார்.
கண்டிப்பா விளையாடுவார்:
எனவே இங்கிலாந்தில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார். அது போன்ற சூழ்நிலையில் பணிச்சுமையை நிர்வகிக்கும் நோக்கத்தில் 2வது போட்டியில் பும்ரா ஓய்வெடுக்க இந்திய நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. இந்நிலையில் 2வது டெஸ்டில் பும்ரா விளையாடாமல் போனால் இந்தியா தோற்கும் என்று இங்கிலாந்து வீரர் மார்க் வுட் தெரிவித்துள்ளார்.
எனவே 0 – 2 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்க பயந்துக்கொண்டு நிச்சயம் இந்தியா 2வது போட்டியில் பும்ராவை விளையாட வைக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதே போல லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3வது போட்டியில் எந்த வெளிநாட்டு பவுலரும் தவற விட விரும்ப மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி மார்க் வுட் பேசியது பின்வருமாறு.
மார்க் வுட் கணிப்பு:
“0 – 2 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையை சந்திக்க இந்தியா பயப்படாமல் இருக்க மாட்டார்கள். அதைத் தவிர்க்க உங்களுக்கு சிறந்த பவுலர் தேவை. லார்ட்ஸ் மைதானத்தில் விளையாட விரும்பவில்லை என்று பும்ரா சொல்வதற்கு எந்த வழியும் கிடையாது. எனவே அந்த 2 போட்டிகளிலும் அவர் விளையாடுவார் என்று நினைக்கிறேன்”
“2வது போட்டியில் வென்று 1 – 1 என இந்தியா தொடரை சமன் செய்தாலும் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு வெளிநாட்டு பவுலரும் லார்ட்ஸ் கௌரவப் பலகையில் தங்களுடைய பெயர் இடம் பெறுவதை விரும்புவார்கள்” என்று கூறினார். ஜஸ்ப்ரித் பும்ரா லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் எடுத்து அங்குள்ள கௌரவப் பலகையில் தனது பெயரைப் பொறிக்க விரும்புவார் என்று அதே நிகழ்ச்சியில் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கூறினார். எனவே 2, 3வது போட்டிகளில் பும்ரா விளையாடுவார் என்று அவரும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.