அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

Estimated read time 1 min read

கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு முன்பு அவர் திருவனந்தபுரத்தில் உள்ள புதரிக்கண்டம் மைதானத்தில் பூத் அளவிலான கட்சித் தொண்டர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆட்சியில் கேரள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சுட்டிக்காட்டி, இந்தக் கட்சிகளின் ஆட்சி மக்களுக்கு பயனளிக்கவில்லை என விமர்சித்தார். கேரளாவில் ஊழல், மோசமான நிர்வாகம், மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யத் தவறியது போன்றவற்றை எடுத்துக்காட்டி, பாஜகவின் மாற்று ஆட்சி மக்களுக்கு நல்ல நிர்வாகத்தை வழங்கும் என உறுதியளித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி விவரித்த அவர், இவை கேரளாவிலும் திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கூறினார். பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கேரளாவில் வலுவான மாற்றாக உருவாகும் எனவும், 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து ஒரு பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், திமுக அரசு மீது மக்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளதாகவும், ஊழல், குடும்ப அரசியல், மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றால் மக்கள் வெறுப்படைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “எங்கள் கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய அளவிலும், எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையில் மாநில அளவிலும் மக்களின் ஆதரவைப் பெறும்,” என்று கூறினார். இந்தக் கூட்டணி எவ்வித நிபந்தனைகளும் இன்றி உருவாக்கப்பட்டதாகவும், அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடாது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் ‘கூட்டணி ஆட்சி’ தான். தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி தான், ஆட்சியிலும் பங்கேற்கும். திமுக மீது அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். நிச்சயம் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றிப் பெறும் எனவும் அமித்ஷா தெரிவித்தார். தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில், மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.
Please follow and like us:

You May Also Like

More From Author