ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் அல்பானிஸ் ஜூலை 12ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை, சீனாவில் அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
அவரது பயணம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகளவிலான நிலைமை தொடர்ந்து மாறி வரும் பின்னணியில், ஆஸ்திரேலிய அரசு நாட்டின் நலன்களைக் கருத்தில் கொள்வதன் மூலம், சீனா மீதான கொள்கையை வரையறுத்து, பிராந்திய நாடுகள் சீனாவுடனான உறவைக் கையாள்வதற்குரிய மாதிரியை வழங்கும் என்று சீன வெளியுறவு விவகார பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லீஹைய்தோங் தெரிவித்தார்.
இதனிடையில் சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் அல்பானிஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது கூறுகையில், சம நிலையில் ஒன்றுடன் ஒன்று பழகி, இரு தரப்புகளுக்கிடையிலான பொது அடிப்படையைக் கண்டறிந்து வேற்றுமைகளை ஒதுக்கிவைத்து, கூட்டு பயனடையும் அடிப்படையிலான ஒத்துழைப்புகள், இரு நாடுகள் மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியவை என்றார்.
நடப்புப் பயணத்தின் போது அல்பானிஸ் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் முக்கியக் கவனம் செலுத்தி வருகின்றார். ஆஸ்திரேலிய நிறுவனங்களின் உயர் நிலை தலைவர்கள் கொண்ட வணிகம் மற்றும் வர்த்தக பிரதிநிதிக் குழு, அவருடன் சேர்ந்து சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளது. சீனப் பொருளாதாரத் தொடர்பில் இருந்து விலகிச் செல்லாமல் இருப்பதற்கான முக்கியப் பயணம் இதுவென்று இப்பிரதிநிதிக் குழு உறுதியாகத் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில், வேளாண் துறை, கனிமத் தாதுத் துறை உள்ளிட்ட பாரம்பரிய துறைகளின் ஒத்துழைப்புக்கான அடிப்படைகளை வலுப்படுத்தி, செயற்கை நுண்ணறிவு, மருத்துவம் மற்றும் சுகாதாரம், பசுமையான எரியாற்றல், எண்ணியல் பொருளாதாரம் உள்ளிட்ட புதிதாக வளரும் துறைகளில் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை இரு தரப்பும் ஆக்கப்பூர்வமாக வளர்க்க விரும்புகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
தவிரவும், இப்பயணத்தின் போது, பல தரப்புவாதம் மற்றும் தாராள வர்த்தகத்தை இரு தரப்பும் வலியுறுத்தும். ஐ.நா சாசனம் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் முக்கியத்துவம் மீண்டும் வற்புறுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.