சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து (கபினி, கிருஷ்ணராஜசாகர்) உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21,514 கன அடியாக உயர்ந்துள்ளது, மேலும் 60,000 கன அடி வரை நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. மேட்டூர் அணை 2025 ஆம் ஆண்டில் நான்காவது முறையாக முழு கொள்ளளவை (120 அடி) எட்டியுள்ளது.
மேட்டூரில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1 லட்சம் கனஅடி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் ஆற்றில் இறங்கவோ, மீன்பிடிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.