கிராமப்புறங்களில் இயங்கும் சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்களுக்கு இனி வணிக உரிமம் (லைசென்ஸ்) பெற தேவையில்லை என தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக, “தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் விதிகள் – 2025” என்ற புதிய சட்டத்தின் கீழ், அனைத்து வணிகர்களும் உரிய கட்டணத்துடன் லைசென்ஸ் பெற வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. இதன் படி, ரூ.500 முதல் ரூ.30,000 வரை கட்டண விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதில், டீக்கடை, சலவைக் கடை, பழைய பேப்பர் விற்பனை, கோரியர் சேவை போன்றவையும் சேர்த்திருந்தனர்.
இந்த அறிவிப்புக்கு வணிகர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, தற்போது தமிழக அரசு புதிய விளக்கத்துடன் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறிய அளவில் வணிகம் செய்யும் வணிகர்கள், குறிப்பாக கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் உள்ள டீக்கடை, சின்ன கடைகள், சலவைக் கடை போன்ற குறு தொழில் செயல்பாடுகள் உரிமம் பெற வேண்டிய கட்டாயத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது, அவர்களது வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாதென்ற கவலையுடன் வெளியிடப்பட்டுள்ள தீர்மானமாக இருக்கிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், வணிகர்களிடையே குழப்பம் ஏற்படாதிருக்க அரசு சார்பாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் வழிகாட்டு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய சூழ்நிலையில் கிராமப்புறங்களில் வணிகம் செய்வோர்களுக்கு எந்தவிதமான லைசென்ஸ் கட்டணம் அல்லது விண்ணப்ப கட்டணமும் தேவையில்லை எனவும் அரசின் விளக்கம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், கிராமப்புற வணிகர்கள் எந்தவித தடையுமின்றி தங்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்லலாம்.