தனுஷ்கோடி பகுதியில், சுமார் 5 அடி உயரத்திற்கு அலைகள் எழும்புவதால், மறு அறிவிப்பு வரும் வரை, அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களைக் கவரும் வகையில், தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை அமைந்துள்ளது. இராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனைக்கு சென்று அதன் இயற்கை அழகையும், வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் பார்த்து ரசிப்பர். இப்பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக இருந்தது. மாலையில், திடீரென சீறி வந்த கடல் அலையால், தனுஷ்கோடி மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் கடல்நீர் புகுந்தது. மேலும், ராட்சத அலைகளால், அப்பகுதியில் எங்கு பார்த்தாலும் கடல் நீராக காட்சியளித்தது. இங்கு கடல் சீற்றமாக இருப்பதால், தடுப்புச்சுவரும், சாலையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தனுஷ்கோடி பகுதியில், சுமார் 5 அடி உயரத்திற்கு அலைகள் எழும்புவதால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை யாரும் தனுஷ்கோடிக்கு செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.