ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இத்தொடர் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. குறிப்பாக 2026 டி20 உலகக் கோப்பை அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறுகிறது எனவே அதற்கு ஆசிய அணிகள் தயாராகும் வகையில் 2025 ஆசிய கோப்பை டி20 தொடராக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்சமயத்தில் உச்சகட்ட எல்லைப் பிரச்சனை நிலவி வருகிறது. அதன் காரணமாக பாகிஸ்தான் விளையாடும் அத்தொடரிலிருந்து இந்தியா வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு பேச்சு வார்த்தைக்கு பின் ஆசிய தொடரில் பங்கேற்க பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது. அதே போல பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதற்கும் பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது.
அட்டவணை அறிவிப்பு:
அதன் காரணமாக ஆசிய கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிய கவுன்சில் அறிவித்துள்ளது. ஆனால் அத்தொடர் பொதுவான இடமான ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள் இடம் பிடித்துள்ளன.
குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். அதில் டாப் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு போட்டியில் மோதும்.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்:
அந்த சூப்பர் 4 சுற்றில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்தும். அத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆசிய கோப்பை இந்திய அணி அட்டவணை (இந்தியா நேரப்படி):
செப்டம்பர் 10, இரவு 7.30: இந்தியா – ஐக்கிய அரபு நாடுகள், துபாய்
செப்டம்பர் 14, இரவு 7.30: இந்தியா – பாகிஸ்தான், துபாய்
செப்டம்பர் 19, இரவு 7.30: இந்தியா – ஓமன், அபுதாபி
இத்தொடரை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனல்களில் நேரடியாக பார்க்க முடியும். ஆன்லைன் மற்றும் மொபைலில் சோனிலிவ் ஃஆப் வாயிலாக பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.